ஆபிரிக்காவின் மிகப்பெரும் அணைக்கட்டினுள் நீர் சேமிப்பதைத் தொடர்கிறது எத்தியோப்பியா.
ஏற்கனவே அறிவித்திருந்தபடியே தனது அணைக்கட்டுத் திட்டத்தின்படி நைல் நதியின் நீரைச் சேகரிக்கும் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்திருக்கிறது எத்தியோப்பியா. சூடான், எகிப்து ஆகிய நாடுகள் பெருமளவில் நைல் நதியிலிருந்து வரும் நீரையே தமது நாட்டின் பாவிப்புக்குத் தங்கியிருக்கின்றன. உயரமான எத்தியோப்பியப் பகுதிகளிலிருந்து நீரைத் தடுத்து அணைக்கட்டில் சேர்ப்பதால் தமது நாடுகளிலிருக்கும் நைல் நதியின் பகுதிகளில் தேவையான நீர் கிடைக்காது என்று அஞ்சுகின்றன அந்த நாடுகள்.
அணைக்கட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பத்து வருடங்களாகவே உண்டாகிப் பெருத்துவரும் பிரச்சினை இது. தமது நாடுகளின் இயற்கை வளப் பிரச்சினையை எத்தியோப்பியா இந்தத் திட்டத்தில் உதாசீனம் செய்து வருவதாக எகிப்தும், சூடானும் குற்றஞ்சாட்டுகின்றன. எத்தியோப்பியாவோ அந்த அணைக்கட்டுத் திட்டம் நாட்டின் அபிவிருத்திக்குக் கட்டாயமானது என்கிறது.
மூன்று நாடுகளும் பல சமயங்களில் வெவ்வேறு குறியுடன் பேசி அவர்களுக்குள்ளிருக்கும் அணைக்கட்டு பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க முயன்று தோல்வியுற்றிருக்கின்றன. ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் கீழ் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் மணலிலிறைத்த நீராகியிருக்கின்றன. எத்தியோப்பியாவுடன் மனக்கசப்புடன் சூடான், எகிப்து ஆகிய நாடுகள் கடும் எச்சரிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. சுமுகமாகப் பேசி முடிவெடுக்காதவரை அவர்களுக்கிடையே போர் உண்டாகலாம் என்ற நிலைமை.
அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை நடாத்த உதவிசெய்வது பற்றியும், அணைக்கட்டின் இரண்டாம் கட்ட நீர் தேக்குதல் பற்றியும் விரைவில் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் பேசித் தீர்ப்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கமுன்னரே எத்தியோப்பியா தொடர்ந்தும் நீரைச் சேர்ப்பதால் சூடானும், எகிப்தும் கொதித்துப் போயிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்