மூன்றாவதாக மேலுமொரு “உலகில் மிகவும்” என்று அடைமொழியைக் கொள்ளக்கூடிய கட்டடம் டுபாயில்.
போலந்தில் திறந்துவைக்கப்பட்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் தனது ஸ்தானத்தை சுமார் ஏழு மாதங்கள் தான் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதைவிட ஆழமான ஒரு நீச்சல் குளம் டுபாயில் திறந்துவைக்கப்பட்டது. போலந்தில் டிசம்பர் 2020 இல் திறக்கப்பட்ட நீச்சல் குளத்தின் ஆளம் 45 மீற்றராகும். டுபாயில் புதிதாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் “ Deep Dive Dubai” இன் ஆழமோ 60 மீற்றராகும்.
உலகிலேயே உயரமான கட்டடம் என்ற இடத்திலிருக்கும் டுபாயின் புர்ஜ் காலிபாவின் உயரம் 828 மீற்றராகும். உலகிலேயே பெரிய வியாபார ஸ்தலம் என்றழைக்கப்படும் “Dubai Mall” கொவிட் 19 க்கு முன்னர் வருடாவருடம் 80 மில்லியன் பேரை ஈர்த்துவந்தது. அந்த வரிசையில் டுபாயின் பிரபலத்துக்கு மேலுமொரு அணியாக ஆழமான நீச்சல் குளம் திகழவிருக்கிறது.
கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் ஜூன் 27 இல் இடம்பெற்றிருக்கும் டுபாயின் ஆழமான நீச்சல் குளம் உலகில் எந்த ஒரு நீச்சல் குளத்தையும் விட நான்கு மடங்கு அதிக நீரைக் கொண்டிருக்கிறது. ஆறு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவை ஒரேயடியாகக் கொண்டிருக்கும் டுபாய் நீச்சல் குளத்திலிருக்கும் நீரில் கொள்ளளவு 14 மில்லியன் லிட்டர்களாகும்.
டுபாய் ஆழமான நீச்சல் குளம் தற்போது அழைக்கப்பட்ட பிரத்தியேகமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்கிறது. இவ்வருட இறுதியில் பொதுமக்களுக்கும் திறந்துவைக்கப்படவிருக்கும் அந்தக் குளத்தின் நீரின் வெப்ப நிலை 30 செல்சியஸாக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்