ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!
கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது.
ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற நிச்சயமின்மைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்போவது யார் என்பதில் பேணப்பட்ட ரகசியங்களுக்கு முற்றுப் புள்ளியாக க ஜப்பானின் பிரபல ரென்னிஸ் நட்சத்திரம் நயோமி ஒஸாகா (Naomi Osaka) தீபம் ஏற்றிவைத்தார்.23 வயதான நயோமி ஜப்பானிய தாய்க்கும் ஹெய்ட்டி நாட்டுத் தந்தைக்கும் பிறந்த கலப்பின ஜப்பானிய வீராங்கனை ஆவார்.ஜப்பானிய தற்காப்புப் படைவீரர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். நாட்டின் உலகப் புகழ் பெற்ற பாடகி மிசியா(RnB singer Misia) தேசிய கீதத்தைப் பாடினார்.
ஜப்பானிய பேரரசர் நருஹிடோ(Naruhito)ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார். அச்சமயம் அரங்கின் மேலே வாண வேடிக்கைகள் ஒளிர்ந்தன.பேரரசர் நருஹிடோவுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக் (Thomas Bach) இருவரும்மாஸ்க் அணிந்தவர்களாக கையசைத்துவீரர்களை வரவேற்றனர்.
ஆரம்ப விழா அரங்கத்துக்கு மேலே வானத்தில் சுமார் ஆயிரத்து 800ட்ரோன்கள் பறக்கவிடபப்பட்டு அவற்றின் மூலம் விநோதமான வண்ணக் கோலங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதியில் ஒளிரும் ட்ரோன்கள் ஒன்று சேர்ந்து பூமிப் பந்தின் வடிவத்தில் வானில் வட்டமாகத் தோன்றிய காட்சி காண்போரைக் கவர்ந்தது.
சுமார் நான்கு மணி நேரம் நீடித்த வாண வேடிக்கைகள், கண்காட்சிகள், அணி வகுப்புகளுடன் தொடக்க விழா நிறைவடைந்தது. உலகெங்கும் உள்ள ஒலிம்பிக் ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக அதனைக் கண்டுகளித்தனர். மிக எளிமையான ஒலிம்பிக் விழா என்றுஊடகங்கள் இன்றைய தொடக்க நாளைவர்ணித்துள்ளன.
இருநூறு நாடுகளினது விளையாட்டு வீரர்கள் தத்தமது நாட்டுக் கொடிகளுடன் அணிவகுத்துச் சென்றனர். மொத்தம் 11ஆயிரம் வீரர்கள் ஜப்பானில் கூடியுள்ளனர். ஆனால் சமூக இடைவெளி பேணல் காரணமாக அணிவகுப்புகளில் மிக அரிதான எண்ணிக்கையானோரை மட்டுமே காண முடிந்தது. போட்டியாளர்களைத் தினமும் வைரஸ் சோதனை செய்வது, தனிமைப்படுத்தலுடன் பயிற்சியில் ஈடுபடவைப்பது என்று பல வித சுகாதார நடைமுறைகள் அங்கு மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவிருக்கின்ற நாடு என்ற ரீதியில் பிரான்ஸ்அதிபர் மக்ரோனும் மற்றும் அமெரிக்க அதிபரது துணைவியார் ஜில் பைடன்உட்பட ஒரு சில வெளிநாட்டுப் பிரமுகர்களுமே இன்றைய தொடக்க விழாவில்கலந்து கொண்டனர். எண்பது வீரர்கள்அடங்கிய பிரெஞ்சு ஒலிம்பிக் விளையா ட்டு அணியினருக்கு அதிபர் மக்ரோன் அங்கு வைத்துத் தனது வாழ்த்துக்களைதெரிவித்தார்.
உலகம் இன்னமும் ஒரு பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்பதைத் தொடக்க நிகழ்வு பிரதிபலித்தது. இதற்கு முன்னர்றியோ, லண்டன் நகரங்களில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டிகளது தொடக்க நிகழ்வுகளில் காணப்பட்டது போன்ற பிராமாண்டம் இன்றைய விழாவில் தென்படவில்லை. ஜப்பானிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் சேர்த்து ஆயிரத்துக்கும் குறைவானவர்களே ரோக்கியோஅரங்கில் கூடியிருந்தனர்.
அரங்கின் பெரும் பகுதி ஆசனங்கள் வெறுமையாய் கிடந்தன. “ஒலிம்பிக்கை நிறுத்து” என்று வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியகோஷங்கள் உள்ளே எதிரொலித்தன.நாடு பெரும் தொற்றுக்குள் சிக்கியுள்ள நிலையில் 11 ஆயிரம் வெளிநாட்டு வீரர்களை விளையாட அழைப்பது ஒலிம்பிக் போட்டிக் களத்தை ஒரு பெரும் தீவிர தொற்றுப் பரப்பும் நிகழ்வாக (super- spreader event) மாற்றிவிடும் என்று கூறுவோர் போட்டியை நடத்துவதற்குக் கடும்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானில் கடைசியாக 1964 ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ரோக்கியோவில் நடைபெற்றிருந்தன. இன்று அங்கு ஆரம்பமாகியுள்ள 31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து ஓகஸ்ட் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.