காஸாவின் பதின்ம வயதினருக்கு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அங்கே ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது.
இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் அல் குட்ஸ் பிரிகேட்ஸ் பாலஸ்தீனப் பிள்ளைகளுக்கு காஸாவின் கோடைகால முகாம் நடத்துகிறது. 13 – 17 ஆண்பிள்ளைகள் 8,000 பேருக்கு அங்கே ஆயுதப் பயிற்சி நடத்துகிறது அந்த அமைப்பு. அது ஒரு சாரணர் முகாம் போன்று நடத்தப்பட்டாலும் அங்கே ஆயுதங்களைக் கையாளும் பயிற்சியும், கயிறுகளில் ஏறும் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
அந்த முகாமில் பங்கெடுக்கும் சிறுவர்கள் தாம் நாட்டுக்காகத் தமது உயிரை விடத் தயாராயிருப்பதாகச் சூளுரைக்கிறார்கள். கோடை காலத்தில் காஸாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நாளுக்குச் சுமார் 500 பிள்ளைகள் அங்கே பேருந்துகளில் கொண்டுவரப்படுகிறார்கள் என்கிறார்கள் முகாம் நடத்தும் தலைவர்கள்.
இஸ்ராயேலின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் முகமாக மனதைக் கட்டுப்படுத்துதல், உடற்பயிற்சி முதல் ஏவுகணைகளைக் கையாளும் பயிற்சிகள் வரை அங்கே கொடுக்கப்படுவதாக அல் குட்ஸ் தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிள்ளைகளுக்குத் தலையை மூடும், முகத்தை மூடும் சால்வைகளும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அவற்றில் தடுக்கப்பட்ட இயக்கமான அல் குட்ஸின் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் பையன்களுக்கான பயிற்சி முகாம்கள் பற்றி இஸ்ராயேல் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. இஸ்ராயேலின் வேவுபார்க்கும் பலூன்கள் வானத்தில் பறப்பது காஸாவில் சகஜம். ஆனாலும், அந்த முகாம்களைத் தடுத்து நிறுத்த இஸ்ராயேல் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்