சைபீரியப் பிராந்தியத்தில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதியின் அளவு சுமார் 837,000 ஹெட்டேர்கள்.
ரஷ்யாவின் சைபீரியாப் பிராந்தியத்தில் வருடாவருடம் காட்டுத்தீ உண்டாகுவது வழக்கம். அதன் காரணம் அச்சமயத்தில் வரட்சி நிலவுவதும் இலகுவாக எரியக்கூடிய காடுகள் இருப்பதுமாகும். அவைகள் அணைக்கப்படுவதும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுமுண்டு. இக்கோடையிலோ வெப்பநிலை மிகக் கடுமையாக இருப்பதால் எரியும் காடுகளின் பரப்பளவு அதிகமாகிக்கொண்டே வருகிறது.
ரஷ்யாவின் இராணுவமும், விமானப்படையும் சேர்ந்து தீயணைப்பாளர்களுடன் காட்டுத் தீக்களை அணைப்பதில் விடாமல் உழைத்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்த காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரவில்லை. பதிலாக மேலும் மேலும் அதிகமாகி சுமார் 837, 000 ஹெக்டேர் காடுகள் எரிந்துகொண்டிருப்பதாக ரஷ்யச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் தினசரி 90,000 ஹெட்டேர்கள் தீப்பிடித்திருக்கின்றன. வெப்பநிலையோ தொடர்ந்து பல நாட்களாக 39 செல்சியஸாகவே இருந்துவருகிறது. தொடர்ந்து பல நாட்களுக்கு மழைவீழ்ச்சி ஏற்பட்டாலே காட்டுத்தீக்களை அணைக்கலாம் என்று தீயணைப்புப் படையினர் தெரிவிக்கிறார்கள்.
காட்டுத்தீக்களில் 70 விகிதமானவை மனிதர்களாலேயே உண்டாக்கப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். சிறிய பங்கே மின்னல் விழுவதால் உண்டாகிறது. மனிதர்களினால் தவறுதலாக ஏற்படுபவைகள் ஒரு பக்கமிருக்கக் காட்டை அழித்துப் பயிரிட விரும்புகிறவர்களும் திட்டமிட்டுக் காட்டை எரிப்பது உண்டு.
ஐதான அளவிலேயே மக்கள் அப்பகுதிகளில் வாழ்வதாலும், அப்பிராந்திய அரசுகளிடம் காடுகளைக் கண்காணிக்கத் தேவையான பொருளாதார வசதிகள் இல்லாமலிருப்பதாலும் நிலைமை வருடாவருடம் மோசமாகிக்கொண்டே வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்