ஆப்கான் அரசின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி தலிபான்களால் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானின் பல பாகங்களைக் கைப்பற்றிவிட்ட தலிபான் குழுக்கள் வேகமாக தமது காய்களை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கான் அரசின் முக்கிய காரியாலயங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை கொடுத்துவிட்டுத் தாக்கியும் வருகிறார்கள். வெள்ளியன்று தலிபான்கள் அரசின் தகவல் தொடர்பு நிலையத்தைத் தாக்கினார்கள். பள்ளிவாசலொன்றுடன் இருந்த அதைத் தாக்கி அதன் உயரதிகாரி டவா கான் மினாபாலைக் கொன்றார்கள் என்று உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.
செவ்வாயன்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லாஹ் முஹம்மாதி குறிவைத்துத் தாக்கப்பட்டார். நாட்டின் தலைநகரில் மிகவும் கடுமையாகப் பாதுகாக்கப்படும் பிராந்தியத்தில் தலிபான்கள் குண்டுகள், துப்பாக்கிகள் சகிதம் நடாத்திய அந்தத் தாக்குதலில் அமைசர் தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரைத் தாக்கியது, ஊடகத்துறை உயரதிகாரியைக் கொன்றது தாமே என்று தலிபான்களின் பேச்சாளர் ஸபினுல்லாஹ் முஹஹீத் அறிவித்தார்.
அதேசமயம் நாட்டில் தாம் கைப்பற்றும் பிராந்தியங்களில் முன்னர் பாதுகாப்புக்குப் பொறுப்பாயிருந்தவர்களையும் தலிபான் குழுவினர் கொண்றொழித்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. தாம் கைப்பற்றிய பகுதியில் “பாதுகாப்பு அதிகாரத்திலிருந்தவர்கள் தமது அடையாளப் பத்திரிகைகளைப் புதிய அதிகாரத்திடம் கையளிக்கவேண்டும். அப்படிச் செய்பவர்களுக்குப் புதிய பாதுகாப்பு அதிகாரம் மன்னிப்பும் பாதுகாப்பும் கொடுக்கும்,” என்று தலிபான்கள் அறிவிக்கிறார்கள். அதை நம்பித் தம்மைத் தலிபான்களிடம் ஒப்படைத்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்