காபுல் அமெரிக்கத் தூதுவராலயத்தில் முக்கிய ஆவணங்களை அழித்துவிடும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாகத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட தலிபான் இயக்கக் குழுக்கள் நாட்டின் தலைநகரான காபுலின் முக்கியமான அமைச்சுகள், தூதுவராலயங்கள் இருக்கும் பகுதியை நோக்கித் தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், அங்கிருக்கும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேற்கு நாடுகள் தமது தூதரக ஊழியர்களைத் தமது நாடுகளுக்குத் திருப்பியெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
காபுலின் அமெரிக்கத் தூதுவராலயத்தில் இருக்கும் ஆவணங்கள் அந்த நகரம் விழும்பட்சத்தில் தலிபான் இயக்கத்தினர் கைகளில் கிடைக்கக்கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக இருக்கிறது. அந்த ஆவணங்கள் தம்முடன் சேர்ந்து பணியாற்றிய ஆப்கானியக் குடிமக்கள் பற்றியவையாகவோ, நாட்டின் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றியதாகவோ இருப்பின் தலிபான் இயக்கத்தினர் கையில் அகப்பட்டு அவை மோசமான விளைவுகளை உண்டாக்கலாம் என்பதை அனைத்தையும் அழித்துவிடும்படி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
காபுலின் ஆட்சிசெலுத்திவரும் ஆப்கானிய அரசு கத்தாரில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் “தலிபான் குழுக்களுடன் சேர்ந்து ஆட்சிசெய்யத் தயார்,” என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்னால் ஜனாதிபதி டிரம்ப் காலத்தில் ஆரம்பித்த அப்பேச்சுவார்த்தைகள் தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றியே நகர்வதாகக் குறிப்பிடப்படுகிறது. தலிபான் இயக்கத்தினர் “நாம் எமது தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை,” என்று தெளிவாகக் கூறிவருகிறார்கள்.
அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டப்படி ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவத்தினரனைவரும் திருப்பியெடுக்கப்படுவார்கள் என்று மீண்டும் ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருக்கிறார். காபுல் தற்போதைக்கு தலிபான்களின் கைகளில் விழாது என்று கணக்கிடுகிறது அமெரிக்க அரசு. ஆப்கானிய இராணுவம் அங்கே சுமார் மூன்று மாதங்களாவது தாக்குப்பிடிக்கும் என்பது அவர்களுடைய கணிப்பு. அப்படியான நிலையில், தேவையானால் தமது தூதுவராலயத்தை விமான நிலையத்துக்கு மாற்றுவதே அவர்களுடைய திட்டம்.
இன்னொரு பங்கு ஊழியர்களைப் பாதுகாப்பாக நாட்டுக்குக் கொண்டுவரவிருக்கிறது அமெரிக்கா. தனது திட்டங்களை நிறைவேற்றவும், விமான நிலையத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்காவிலிருந்து சுமார் 3,000 இராணுவத்தினர் காபுலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தனது தூதுவராலய ஊழியர்களை, விமான நிலையத்தைத் தாக்குபவர்களைக் கடுமையாக எதிர்கொள்வோம் என்று வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் எச்சரித்திருக்கிறார்.
காபுலிலிருக்கும் தனது இராணுவத்தை அந்த நாட்டின் அரசுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக அங்கேயே தொடர்ந்தும் வைத்திருக்கப்போவதாக நாட்டோ அமைப்பு, எதிர்பாராதவிதமாக முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.
கத்தாரில் நடக்கும் பேச்சுவார்த்தைகளிடையே அமெரிக்கா தலிபான்களுடன் தனியான ஒரு ஒப்பந்தத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அது ஆப்கானிஸ்தானில் தம்முடன் சேர்ந்து பணியாற்றிய ஆப்கானியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றியாகும். சுமார் ஆயிரத்துக்கும் மேலான அவர்களைப் பாதுகாப்பாகக் காபுலில் இருந்து கத்தாருக்குக் கொண்டுவர விரும்புகிறது அமெரிக்கா. அங்கே அவர்களைத் தற்காலிகமாகத் தங்கவைத்து அவர்களின் பின்னணிகளை ஆராய்ந்த பின் அவர்களை அடுத்த கட்டமாக அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதே அத்திட்டம். அதுபற்றிய விபரங்கள் இன்னும் முழுவதுமாகத் தெரியப்படுத்தப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்