யானைகள் நலன் பேண, கடுமையான சட்டங்கள் யானை உரிமையாளர்கள் மீது சிறீலங்காவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுமார் 7,000 யானைகள் காடுகளில் வாழ்வதாக சிறீலங்காவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 200 யானைகள் புத்த பிக்குகள் உட்பட வெவ்வேறு தனியார்களால் உடமைகளாக வைத்திருப்படுகின்றன. யானைகளை மோசமாக நடத்துவது பற்றிய குற்றச்சாட்டுக்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. தமது பணத்திமிரைக் காட்டவும் சிலர் யானைகளை வளர்ப்பது அதிகமாகியிருக்கிறது
சிறீலங்காவின் அரசு வன விலங்குகள் நலம் பேணும் புதிய சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்துகிறது. யானைகள் ஒவ்வொன்றுக்கும் அவைகளின் உயிரியல், உடல் அடையாளம் [biometric] கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன. அவைகளில் அந்தந்த யானையின் மரபணு அடையாளமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
யானைகளை வைத்திருப்பவர்கள் அவைகளைத் தினசரி இரண்டரை மணி நேரம் குளிப்பாட்ட வேண்டும். யானைகளைக் கையாளும்போது எவரும் மதுவருந்தியிருக்கக்கூடாது,போதை மருந்தின் பாதிப்பிலிருக்கலாகாது. குழந்தை யானைகளை வேலைகளுக்குப் பாவிக்கலாகாது, அவைகளின் பெற்றோரிடமிருந்து பிரிக்கலாகாது, கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுத்தலாகாது. வேலை செய்யும் யானைகளுக்கு தினசரி நான்கு மணி நேரம் மட்டுமே வேலை, இரவு வேலைத் தடை.
யானைகள் சட்டங்களுக்கு ஏற்படப் பராமரிக்கப்படுவதைக் கண்காணிப்பது உரிமையாளர்களின் கடமை. ஆறு மாதங்களுக்கொரு முறை அவைகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். யானை வதையில் ஈடுபடுபவர்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் பொறுப்பானவரை 3 வருடங்கள் வரை சிறையில் தண்டிக்கலாம்.
கடந்த பதினைந்து வருடங்களில் மட்டும் தேசிய வனவிலங்குக் காடுகளிலிருந்து 40 குழந்தை யானைகள் களவாடப்பட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யானைகளைக் காட்டிலிருந்து களவாடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் சிறீலங்காவில் இருப்பினும் அதற்காக எவரும் நீதியின் முன்னர் நிறுத்தப்படுவதில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்