இஸ்ராயேல் காஸா எல்லையில் கைகலப்பு. காஸாவைக் குறிவைத்து இஸ்ராயேல் விமானத் தாக்குதல்கள்.
காஸா பிராந்தியத்தை ஆளும் தீவிரவாத அமைப்பினரான ஹமாஸ் இஸ்ராயேலின் எல்லைக்காவல் நிலையத்தில் எதிர்ப்பு ஊர்வலமொன்றுக்கு வரும்படி பாலஸ்தீனர்களைத் தூண்டியிருந்தது. அங்கே கூடிய பாலஸ்தீனர்கள் எல்லைக்காவல் நிலையத்தை நோக்கி பெற்றோல் குண்டுகளை வீசினார்கள், காவல் நிலையக் கதவின் மீது ஏறினார்கள். அவர்களை இஸ்ராயேல் இராணுவம் கண்ணீர்க் குண்டுகளாலும் பின்னர் துப்பாக்கிச்சூடுகள் நடாத்தியும் எதிர்த்தது.
சுமார் 40 பேர் அந்தக் கைகலப்புகளில் காயமடைந்தார்கள். இரண்டு பாலஸ்தீனர்களும், ஒரு இஸ்ராயேல் பொலீசும் கடுமையான காயங்களுக்குள்ளாகினார்கள். பாலஸ்தீனர்களில் ஒருவர் 13 வயதுப் பையன். அவன் தலையில் துப்பாக்கிக் குண்டால் தாக்கப்பட்டான்.
அதையடுத்து இரவில் இஸ்ராயேலின் விமானங்கள் காஸா பிராந்தியத்தின் மீது குறி வைத்துத் தாக்கின. அவைகள் நான்கு இடங்களைக் குறிவைத்ததகவும் அவை ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதத் தயாரிப்பு, ஆயுதச் சேகரிப்பு நிலையம் ஆகியவை என்று இஸ்ராயேல் இராணுவம் குறிப்பிட்டது.
நடந்த தாக்குதல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹமாஸுடன் நடாத்தப்பட்ட போருக்குப் பின்னரான கடுமையான நடவடிக்கையாகும் என்று இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் குறிப்பிட்டார். ஹமாஸ் திட்டமிட்டே பாலஸ்தீனர்களைத் தூண்டிவிட்டு இஸ்ராயேலை மீண்டும் போருக்கு இழுக்க முற்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்