காலநிலை மாற்ற விளைவுகளாக ஈராக், சிரியாவின் 20 % மக்கள் நீர், உணவு, மின்சார வசதியிழந்து வருகிறார்கள்.
நஹ்ர் அல்-புராத் [Nahr Al-Furāt] என்று அரபியில் அழைக்கப்படும் நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாக ஓடுகிறது. சுமார் 2,800 கி.மீ நீளமான தென்மேற்காசியாவின் அதி நீளமான இந்த நதியே தீகிரிஸ், எபுராத் ஆகிய நதிகளுக்கான நீரைக் கொடுக்கிறது. கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வறட்சியால் இந்த நதிகளெல்லாம் நீர்மட்டத்தால் குறைந்து அவற்றை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிரண்டிலும் அந்த நதியில் தமது விவசாயம், உணவு, மின்சாரம் ஆகியவைகளுக்காகத் தங்கியிருக்கும் சுமார் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் 13 மனிதாபிமான அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிக்கின்றன. 70 வருடங்களின் அதி மோசமான வரட்சியைத் தற்போது அனுபவிக்கும் சிரியாவில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானாவர்களின் வாழ்வாதாரங்கள் அந்த நதி நீரிலேயே தங்கியிருக்கிறது.
அதிகரித்து வரும் வெப்பநிலை, குறைந்துவிட்டிருக்கும் மழைவீழ்ச்சி, வரட்சி ஆகியவை ஒன்றிணைந்து விவசாய மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. நதிகளின் வழியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்திருப்பதால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் தேவையான மின்சாரமின்மையால் அப்பிராந்தியத்திலிருக்கும் ஆரோக்கிய சேவை உட்பட்ட மக்கள் சேவை இயக்கங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இயற்கையால் ஏற்படுத்தப்படும் இவ்விளைவுகள் தவிர துருக்கியுடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளுக்கு இருக்கும் நீர்ப்பங்கீட்டு அரசியலும் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாக அந்த நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. தனது பக்கத்திலிருந்து துருக்கி செக்கனுக்கு 500 கன மீற்றர் நீர் கொடுப்பதாக அவ்விரு நாடுகளுடன் 1987 இல் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததை மீறி 200 கன மீற்றரே கொடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிரியாவில் எபுராத் நதி ஓடும் பகுதியிலிருக்கும் குர்தீஷ் மக்களைத் தண்டிப்பதற்காகவே துருக்கி அதைச் செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கிழக்கு சிரியாவில் வாழும் பகுதி சுயாட்சி பெற்ற குர்தீஷ் மக்களிடையே துருக்கியைத் தாக்கி வரும் இயக்கங்கள் செயற்படுவதாக துருக்கி குற்றஞ்சாட்டி வருகிறது. எபுராத் நதிக்கான 90 % நீரையும், திகிரிஸ் நதிக்கான 44 % நீரையும் கட்டுப்படுத்தக்கூடிய புவியியல் அமைப்பு நிலைமையே இதற்குக் காரணமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்