லூயிசியானா மாநிலத்தில் பெரும் சேதங்களை ஈடா சூறாவளி ஏற்படுத்திவிட்டுப் போக, பின்னால் வருகிறது வெப்ப அலையொன்று.
அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளிகளில் ஐந்தாவது பலமான ஈடா லூயிசியானா மாநிலத்தை ஞாயிறன்று தாக்கியது. அதையடுத்துப் பலமிழந்த அது புளோரிடா, அலபாமா, மிசிசிப்பி மாநிலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சுமார் 5,000 மீட்புப் படையினரும், அதிகாரிகளும் லூயிசியானா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களைக் கணிக்கவும், காணாமல் போனவர்களைத் தேடவும், உதவவும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அந்த மாநிலத்தில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. கொள்ளை, களவுகளில் ஈடுபடுபவர்களைத் தடுக்க ஊரடங்குச் சட்டம் நிலவுகிறது. அதே சமயம் மில்லியனுக்கும் அதிகமானோர் மாநிலத்தில் தமது மின்சாரத் தொடர்புகளை இழந்திருக்கிறார்கள். மேலும் சில வாரங்களுக்கு அவை சரியாகப்போவதில்லை என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சரிசெய்யும் பணிகளில் 25,000 பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்சாரம் இழந்ததால் செயற்படாமல் போன இயந்திரங்கள் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் உண்டாக்கியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான பெற்றோல், டீசல் போன்றவைகளை விநியோகிக்க முடியாமல் பல பகுதிகளில் நிலையங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. மின்சாரமில்லாததால் நீர் விநியோகமும் நடைபெறவில்லை. தொன் கணக்கில் பழுதாகிவிட்ட உணவுகள் வீசப்படுகின்றன.
ஈடா சூறாவளியால் தாக்கப்பட்டு நிலையிழந்திருக்கும் மாநிலத்தினரை ஒரு வெப்ப அலை தாக்கவிருப்பதாக வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. மின்சார வசதியில்லாத நிலைமையில் வெப்ப அலையின் வேகம் மக்களை மேலும் பலவீனமாக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. சூறாவளியால் இதுவரை நால்வர் இறந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பலவீனர்கள், வயதானவர்கள் வரவிருக்கும் வெப்ப அலையினால் மேலும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்