கிளாஸ்கோ [U.N. COP26] மாநாட்டில் தமது குரலுக்கும் இடமிருக்குமா என்று சந்தேகப்படும் 46 பின்தங்கிய நாடுகள்.

நவம்பர் மாதத்தில் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா கூட்டியிருக்கும் சர்வதேச மாநாடு [U.N. COP26]. நிலவும் கொவிட் கட்டுப்பாடுகளும், தடுப்பு மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் சேர்ந்து தம்மை அந்த மாநாட்டில் பங்குகொள்ளவிடாமல் தடுக்கலாம் என்று உலகின் பின்தங்கிய 46 நாடுகள் ஒன்றுசேர்ந்து குரலெழுப்பியிருக்கின்றன.

“இன்னும் ஏழே வாரங்களில் ஆரம்பிக்கவிருக்கு அந்த மாநாட்டில் நாம் இணைந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றி அந்த மாநாட்டின் நிர்வாகிகள் எங்களுக்கு இதுவரை குறிப்பிடவில்லை. அந்த மாநாட்டுக்கு எப்படிச் செல்வது என்று எங்கள் நாடுகளின் பிரதிநிதிகள் விசனப்படுகிறார்கள்,” என்கிறது அந்த நாடுகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை.

“காலநிலை மாற்றங்களின் விளைவுகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருபவை எங்கள் நாடுகள்தான். அதற்காக உலகம் எப்படியான தீர்வுகளை எடுக்கப்போகிறது என்பதை விவாதிப்பதில் எங்களைத் தவிர்க்கக்கூடாது. அது எங்கள் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும்,” என்று தொடர்கிறது அவ்வறிக்கை.

குறிப்பிட்ட 46 நாடுகளில் மியான்மார், பங்களாதேஷ், தன்சானியா, கொங்கோ குடியரசு உட்பட 20 நாடுகள் ஐக்கிய ராச்சியத்தின் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கான சிகப்புப் பட்டியலில் இருக்கின்றன. அந்த நாடுகளின் தடுப்பு மருந்து போடாதவர்கள் ஸ்கொட்லாந்துக்குள் நுழைவதானால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டிருப்பவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்.

அதைத் தவிர ஸ்கொட்லாந்துக்குச் செல்லும் விமானங்களும் பெரும்பாலும் நேரடியாக அங்கே போகாது வேறு நாடுகளுக்கூடாகப் பயணம் செய்யவேண்டிய நிலைமை இருப்பதால் வழியிலிருக்கும் நாடுகளின் கொவிட் கட்டுப்பாடுகள் பிரதிநிதிகளின் பிரயாணத்துக்கு இடைஞ்சலையே கொடுக்கும், போன்ற பல பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுகிறார் பின்தங்கிய நாடுகளின் அமைப்பின் பிரதிநிதி சோனம் புங்க்ட்சோ வண்டி.

2015 இல் பாரிஸில் இதே காரணத்துக்காக நடந்த மாநாட்டின் தொடர்ச்சியே U.N. COP26 ஆகும். கொவிட் 19 பரவலையும், கட்டுப்பாடுகளையும் சுட்டிக்காட்டி அந்த மாநாட்டை மேலுமொரு வருடம் தள்ளிப் போடும்படி கிரீன்பீஸ் உட்பட ஒரு பகுதியினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு வருடம் அது தாமதமாகியிருக்கிறது என்பதால் மீண்டும் தள்ளிப்போடலாகாது. காலநிலையின் தாக்குதல்களின் அகோரம் வேகமாகிக்கொண்டிருக்கிறது என்று வாதாடுகிறார்கள் இன்னொரு பகுதியினர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *