பஹ்ரேனில் மீண்டும் யூதர்களின் சினகூகா செயற்பட ஆரம்பித்திருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் 2020 இல் ஏற்படுத்திவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் இணைப்பு பல துறைகளிலும் அந்த நாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரேன், எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ராயேலுடன் பல பொருளாதார, கலாச்சார இணைப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவைகளில் ஒன்றாக பஹ்ரேனில் வாழும் சிறிய யூத சமூகத்தினர் மீண்டும் தமது வழிபாட்டு ஸ்தலமான சினகூகாவில் கூட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பஹ்ரேனிலிருந்த சினகூகா அரபு – இஸ்ராயேல் மோதல்கள் பலமாக ஆரம்பித்தபோது [74 வருடங்களுக்கு முன்னர்] இடிக்கப்பட்டது. அதன் பின்பு அங்கிருந்த யூதர்கள் மறைவாகவே தங்களது கலாச்சாரத்தையும், வழிபாட்டையும் பேணவேண்டியதாயிற்று. ஆனாலும், அவர்கள் பொருளாதாரத் துறையில் பகிரங்கமாகவே செயற்பட்டு வந்தார்கள்.
சுமார் 50 பேரைக் கொண்ட பஹ்ரேனின் யூத சமூகத்தினர் சமீபத்தில் தமது சினகூகாவை சுமார் 159,000 டொலர்கள் செலவில் மீண்டும் புனரமைத்துப் பாவனைக்கு ஏற்றதாக்கியிருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலிருக்கும் கட்டடத்தையும் வாங்கி அங்கே ஒரு யூத பாடசாலையையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்த சினகூகாவின் வழிபாட்டுத் தலைவர் குறிப்பிடுகிறார்.
“சுமார் 2,000 வருடங்களாக இந்தப் பிராந்தியத்தில் யூதர்களின் வழிபாடு வெளிப்படையாக இருந்தது. அது 1947 இல் நிறுத்தப்பட்டது. மீண்டும் எங்கள் வழிபாட்டுத் தலத்தைத் திறந்து, எமது கலாச்சாரத்தைப் பேண முடியுமென்பது மிகப்பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயம்,” என்று கடந்த மாதம் சினகூகாவைத் திறந்துவைத்துப் பேசிய வளைகுடா நாடுகளுக்கான யூதத் தலைவர் ரபி எலி அபடீ குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்