ஐஸ்லாந்துப் பெண்களை ஏமாற்றிவிட்டது நாட்டின் தேர்தல் ஆணையம்.

ஐஸ்லாந்தில் சனியன்று நடந்த தேர்தலில் ஆளும் கட்சிகளின் கூட்டணியே வெற்றி பெற்றதாகத் தெரியவருகிறது. 63 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐஸ்லாந்தில் ஆளும் கட்சிக் கூட்டணி 37 இடங்களைப் பெற்றதன் மூலம் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. 

ஆளும் கட்சிகள் தாம் தேர்தலுக்குப் பின்னரும் கூட்டாக ஆளுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். நடந்த தேர்தலுக்கு முன்னர் அவர்களின் இரண்டாவது பெரிய கட்சி முன்னரை விட ஐந்து அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. எனவே கட்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்திப் புதிய அரசாங்கத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர ஐஸ்லாந்துப் பாராளுமன்றத்தில் இத்தேர்தலின் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பிய நாடொன்றின் பாராளுமன்றத்தில் பெண்கள் அங்கத்துவம் பெரும்பான்மையாக ஆகியிருப்பதாக அறிவிக்கபப்ட்டது 63 பாராளுமன்ற இடங்களில் 33 ஐப் பெண்கள் கைப்பற்றியிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஆனால், ஞாயிறன்று பிற்பகல் தேர்தல் ஆணையம் தான் வாக்குகளை எண்ணி, கணக்கிடுவதில் தவறிழைத்திருப்பதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டது. 52 % பெண்கள் அங்கத்துவத்தால் ஐரோப்பாவில் ஒரு சரித்திரம் படைத்திருப்பதாக நாள் முழுவதும் கொண்டாடிய ஐஸ்லாந்துப் பெண்களுக்கு ஏமாற்றம். 33 ஆண் உறுப்பினர்களும், 30 பெண் உறுப்பினர்களும் ஐஸ்லாந்துப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை ஐரோப்பிய நாடுகளில் சுவீடனில் தான் பெண் பா.உ-க்களின் அங்கத்துவம் அதிகமாக இருந்திருக்கிறது. சுவீடனில் 47 % பா.உ-க்கள் பெண்களாகும். சர்வதேச ரீதியில் பெண்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாராளுமன்றங்கள் ருவாண்டாவிலும் [63% பெண்கள்], கியூபாவிலும் [53% பெண்கள்], நிக்காராகுவாவிலும் [51%] தான் இருக்கின்றன. எமிரேட்ஸிலும், மெக் ஸிகோவிலும் 50% பா.உ-க்கள் பெண்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *