திரிபுரா மாநிலப் பள்ளிவாசல் அழிப்பைத் தூண்டியவர்களுக்கு வலைவிரிக்கிறது இந்தியப் பொலீஸ்.
இந்தியாவின் வடகிழக்கிலிருக்கும் திரிபுரா மாநிலத்தின் பள்ளிவாசல்கள் சிலவற்றை சிதைத்து நாசப்படுத்தத் தூண்டிவிட்ட சுமார் 100 சமூகவலைத்தளக் கணக்குகளுக்கு உரிமையாளர்களைத் தேடிவருகிறது இந்தியப் பொலீஸ். கடந்த மாதம் பங்களாதேஷில் முஸ்லீம்கள் வாழும் பகுதியொன்றில் வாழ்ந்த இந்துக்களைத் தாக்கி அவர்களின் கோவில்களை நாசப்படுத்தியது ஒரு வெறிக்கூட்டம். அதற்குப் பழிவாங்கவே திரிபுராவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல்களை யாரோ தூண்டிவிட்டனர்.
நாலு பள்ளிவாசல்கள் நாசப்படுத்தப்பட்டன. சில முஸ்லீம்களின் வீடுகளும், வியாபார தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதற்கான தூண்டுதல்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்கள் மூலம் நடாத்தப்பட்டதாகப் பொலீசார் குறிப்பிடுகின்றனர். அப்படியான 102 பதிவுகள் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டு அவைகளை நீக்கும்படி குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களிடம் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.
முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கும்படி வெளியிடப்பட்ட குறிப்பிட்ட பதிவுகளிலிருந்த பல படங்கள் விபரங்கள் திரிபுராவுக்குச் சம்பந்தமே இல்லாதவை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
திரிபுராவின் ஆளும்கட்சியாக பாரதிய ஜனதா கட்சியே இருந்துவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்