“ஐரோப்பியர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதிமுதல் இயற்கைப் பிரச்சினை மாசுபடுத்தப்பட்ட காற்றுத்தான்!”
சுவாசிக்கும் காற்றில் எத்தனை விகித நச்சுவாய்க்களின் அளவு இருக்கலாம் என்ற உலக ஆரோக்கிய அமைப்பின் ஆலோசனையை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றியிருந்தால், நச்சுக்காற்றுகளின் தாக்குதல்களால் இறந்த 307,000 பேரில் பாதிப்பேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறது ஐரோப்பாவின் சூழல் மாசுபாட்டைக் கண்காணிக்கும் திணைக்களம். அதை அடிப்படையாகக் கொண்டு, “ஐரோப்பியர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதிமுதல் இயற்கைப் பிரச்சினை மாசுபடுத்தப்பட்ட காற்றுத்தான்,” என்று சுட்டிக்காட்டுகிறது அந்த அமைப்பின் சமீபத்தையை அறிக்கை.
ஐரோப்பாவின் நகரங்களில் வாழும் 90 % மக்கள் தாம் சுவாசிக்கும் காற்று மூலம் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய நச்சுத் துகள்களை உறிஞ்சிக்கொள்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.
அந்த நச்சுத்துகள்கள் மனிதர்களின் சுவாச அவயவங்களைத் தாக்கி வெவ்வேறு சுகவீனங்களை உண்டாக்குகிறது. அவைகளின் விளைவால் மனிதர்களின் செயற்பாடு பலவீனமடைகிறது. சுவாசத்தில் ஏற்படும் பலவீனம் அதன் மூலம் இருதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவற்றைத் தடுத்துத் திடீர் மாரடைப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சுவாசிக்கும் காற்றின் தரம் ஐரோப்பாவில் 2019 முதல் தரத்தில் முன்னேறி வருகிறது. ஆனால், சில நாடுகளில் வேகமாக மோசமாகி வருகிறது. ஐரோப்பாவின் வடக்கிலும், மேற்கிலும் சுத்தமாகி வரும் வாயுவின் தரம் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மேலும் அசுத்தமாகி வருகிறது. 2030 இல் ஒன்றியத்துக்குள் நச்சுக்காற்றுப் பாதிப்பால் குறைந்த வயதில் இறப்பவர்கள் எண்ணிக்கையை 2005 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 55 % ஆல் குறைக்கவேண்டும் என்பது அப்பிராந்தித்தின் திட்டமாக இருக்கிறது.
மிக அதிகமான எண்ணிக்கையில் நச்சுக்காற்றைச் சுவாசித்ததால் குறைவான வயதிலேயே இறந்தவர்கள் போலந்தில் தான் அதிகம். அங்கே 39.300 இறப்புகள் சுவாசிக்கும் காற்றின் மோசமான தரத்தினால் உண்டாகியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்