டென்மார்க்கின் போர்க்கப்பல் நாலு கடற்கொள்ளைக்காரர்களைக் கொன்று மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது.
நைஜீரியாவின் கடலெல்லையை அடுத்துள்ள கினியாக் குடாவில் ரோந்துசெல்லும் டென்மார்க்கின் போர்க்கப்பல் கடற்கொள்ளைகார்கள் நால்வரைச் சுட்டுக்கொன்றது, மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது. நவம்பர் 24 ம் திகதி புதனன்று இச்சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்கொள்ளைக்காரர்களின் அட்டகாசத்துக்குப் பிரபலமான இடங்களிலொன்று கினியாக் குடாப்பிரதேசம் ஆகும். அப்பகுதியில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் நீண்ட காலமாகவே கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள், வழிப்பறிக்கு ஆளாவதால் அவர்களுக்கு உதவுமுகமாக அங்கே ரோந்து செல்லும் நாடுகளில் டென்மார்க்க்கும் ஒன்றாகும்.
டென்மார்க்கின் போர்க்கப்பலான The Esbern Snare அங்கே ஒரு மாதத்துக்கு முதல் தனது பணியில் ஈடுபட ஆரம்பித்தது. அப்பகுதியில் வந்துகொண்டிருந்த சில சரக்குக் கப்பல்களை ஒட்டி ஒரு வேகப்படகு சந்தேகத்துக்கிடமாக நடமாடிக்கொண்டிருந்தது. அதைக் கவனித்த டனிஷ் போர்க்கப்பல் அவர்களை அடையாளம் காணக் கேட்டபோது மறுக்கவே அப்படகு கடற்கொள்ளைக்காரர்களுடையது என்ற சந்தேகத்தில் எச்சரிக்கையாக டனிஷ்காரர்கள் வானத்தில் துப்பாக்கிச்சூடு செய்தார்கள்.
பதிலாக கடற்கொள்ளையர்கள் டனிஷ் போர்க்கப்பலைத் தாக்க ஆரம்பிக்கவே, இரு பகுதியாருக்குமிடையே துப்பாக்கிச்சூடுகள் நடந்தன. அதில் டனிஷ்காரர் எவரும் காயமடையவில்லை.
அப்பகுதியில் அமெரிக்கா, பிரிட்டன், போர்த்துக்கால், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளும் ரோந்துக்காகத் தமது போர்க்கப்பல்களை அனுப்பியிருக்கின்றனர். இவ்வருடம் இதுவரை 28 கப்பல்கள் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டுள்ளன. கடந்த வருடமோ 46 தாக்குதல்கள் நடாத்தப்பட்டு 130 சிப்பாய்கள் கடற்கொள்ளையரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
கடற்கொள்ளையர் வர்த்தகக் கப்பல்களை வழிப்பறி செய்வதுடன், தாம் சிறைப்பிடிக்கும் சிப்பாய்களுக்காக கப்பம் கேட்பதும் வழக்கம்.
சாள்ஸ் ஜெ. போமன்