வீர மறவர்களுக்கு விழிநீர் அபிஷேகம்


மண்ணுக்காய் மடிந்த மாவீரர் புகழ்தனை
பண்ணெடுத்துப் பாடப் பாவலனே எழுந்துவா
வானகமும் கீழிறங்கி கல்லறையை முத்தமிட்டு
மண்காத்த வீரர்களை வாஞ்சைகொண்டு தழுவி

கவிஞர்களின் தூரிகையை மழைநீரால் நிரப்பி
கவிதைகளை கணப்பொழுதில் எழுதுங்கள் என்றும்சொல்லி
புவியிலுள்ள தமிழர்களை புறப்படுங்கள் துயிலும் இல்லத்திற்கு
குவிந்துநின்று கைகூப்பி கும்பிடுங்கள் மாவீரர்களையென்று

கார்த்திகை நாளில் கட்டளை பிறப்பிக்கும்
கார்மேகங்களின் கனிவான கட்டளையால்
விழித்துவிட்டோம் கல்லறைகளை நோக்கி
விழிநீரால் அபிஷேகம்செய்ய எங்கள் மண்மீட்ட தெய்வங்களுக்கு

பூமாலை பாமாலை இரண்டும் சேர்த்து-தமிழ்ப்
பூமியின் மன்னவன் பிரபாகரனையும் நினைத்து
சாமிகள் நீங்கள்தான், சாகாவரம் உங்களுக்கென்று
திமிரோடு வணங்குவோம் தமிழர்கள் நாங்களென்று!

எழுதுவது : வவுனியா விஜயலக்சுமி