நச்சுயிரின் மர்மம்

மறைந்து மனிதனை மாய்க்கும் மாயமோ?
மருந்து இருந்தும் மரணத் தாக்கமோ?
விரைந்து பகிரும் வித்தை போக்கவே
வருந்தி உழைக்கும் வித்தகர் பாவமே!

இறைந்தும் வலுவிலா இயற்கை எய்தியோர்
இலக்கம் கணக்கில் இருப்பதும் உளவோ?
நிறைந்த நச்சுயிர் நிலையில் கொள்ளா
நிலைதடு மாறிடும் நிலைதான் நீங்குமோ?

இறைவன் சீற்றம் இயற்கைப் பேரிடர்
ஏனிந்த வாட்டம்? எதற்கு ஒட்டம்?
மறந்த மானுடம் மறுபடி மாறவே
மக்கள் அன்பால் மகிழ்ந்து வாழவே!

உறைந்த உறவுகள் உணர்தல் வேண்டும்
உலகில் எல்லா உயிரும் பேணிடும்
குறைந்த பண்பும் குன்றாய் முகிழ்ந்திட
குழுவாய் நல்ல குணங்கள் பெற்றிடு

மறையாம் குறளை முகிழ்த்து கற்றிட
மனதில் இறையின் மாண்பை கொண்டிட
முறையாய் இயற்கை வளத்தைக் காத்திட
மறையும் தானே மாய்க்கும் கோவிடும்!

சிறையில் இருந்து செழித்து வருவோம்!
சிந்தனை திறனால் சீருடன் வாழ்வோம்
பறவைகள் போன்று பறந்து செல்வோம்.
படிப்பினை ஏற்று பாங்குடன் வெல்வோம்!

எழுதுவது:
உத்திராபதி இராமன் (DSP-R), ஈப்போ, ,பேராக், மலேசியா
19/1/2022