மிரட்டியபடி புத்தின் ஐரோப்பாவுக்கான எரிவாயுவை நிறுத்தவுமில்லை, மிரட்டலின் உள்ளீடு வெறும் கண்துடைப்பே.
“நட்பு இல்லாத நாடுகளுக்கு விற்கப்படும் எரிவாயுவுக்கான விலையை ரூபிளில் தரவேண்டும்,” என்று கடந்த வாரம் குறிப்பிட்டுச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதி. வியாழனன்று அதே மிரட்டலை மீண்டும் அடிக்கோடிட்டுச் சொன்னார். ஆனால், மிரட்டலை ஏற்றுக்கொள்ள ஐரோப்பியத் தலைவர்கள் தயாராக இல்லை, புத்தினும் எரிவாயுக் குளாய்களை, “நட்பாயில்லாத நாடுகளுக்கு” மூடவுமில்லை.
புத்தின் ரூபிளில் விலையைத் தரவேண்டும் என்று கேட்பது நேரடியாக ஐரோப்பிய நாடுகள் ரூபிள் நாணயத்தில் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதல்ல. விலையை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருக்கும் பிரத்தியேக கணக்கொன்றில் பவுண்டு, எவ்ரோ, டொலர்களில் செலுத்தலாம். அத்தொகை ரஷ்ய அரசால் தமது காஸ்புரோம் வங்கியில் ரூபிளாக மாற்றிக்கொள்வார்கள். அப்படியான தீர்வில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை.
ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவிடமான எரிவாயு ஒப்பந்தங்கள் நீண்ட காலத்துக்கானவை. அவை ஏற்கனவே எந்த நாணயத்தில் விலை செலுத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டவை. புத்தின் இனிமேல் செய்யப்படும் ஒப்பந்தங்களுக்கு ரூபிளில் ஒப்பந்தம் எழுதவேண்டுமென்கிறாரா என்பதும் கேள்விக்குறியே.
ஐரோப்பிய நாடுகளின் தீர்மானம் ரஷ்யாவிடம் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் முடிந்தபின் அவற்றைப் புதுப்பிக்காமல் இருப்பதே ஆகும். அத்துடன், ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடம் அடுத்த பனிக்காலம் வரை தேவைக்கான எரிவாயு சேமிப்பில் இருக்கிறது. எனவே, புத்தின் செய்யும் மிரட்டல் தனது நாட்டு மக்கள் முன்னர் தன்னை ஒரு பலமானவராகச் சித்தரிப்பதற்கே என்கிறார்கள் அவதானிகள்.
ரஷ்யாவிடம் எரிவாயுக் கொள்வனவை நிறுத்த முடிவுசெய்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் சந்திக்கவிருக்கும் விளைவு எரிசக்திக்கான கணிசமான விலையேற்றமாக இருக்கும் என்கிறார்கள் சர்வதேச வர்த்தகத்தை அலசுபவர்கள். ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கான விலை ஏற்கனவே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விளைவாக சுமார் 7.6 % பணவீக்கத்தைக் கடந்த மாதங்களில் கண்டு வருகின்றது ஐரோப்பா.
சாள்ஸ் ஜெ. போமன்