வருடாந்திர இராணுவப் பயிற்சியொன்றில் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறது பிலிப்பைன்ஸ்.
அமெரிக்கா 1951 இல் பிலிப்பைன்ஸுடன் ஏற்படுத்திக்கொண்ட இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் 1999 இல் மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி வருடாவருடம் இரண்டு நாடுகளின் இராணுவமும் சேர்ந்து நடத்தும் போர்ப்பயிற்சி இவ்வாரம் திங்களன்று பிலிப்பைன்ஸில் ஆரம்பித்திருக்கிறது. இதுவரை நடந்த போர்ப்பயிற்சிகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியது என்று குறிப்பிடப்படும் இப்பயிற்சியில் 5,100 அமெரிக்க இராணுவ வீரர்களும் 3,800 பிலிப்பைன்ஸ் வீரர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுவார்ட்டே பதவிக்கு வந்தவுடன் பக்கத்து நாடான சீனாவுடன் உறவில் நெருங்கிக்கொள்ளவே விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவருக்கு சீனா பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக உதவிகளும் கடனும் கொடுத்தது. அதேசமயம், தென் சீனக் கடல் பிராந்தியம் முழுவதுமே தனக்கானது என்று கோரிவரும் சீனா அதிலிருக்கும் குட்டித் தீவுகளில் தனது பாதுகாப்பு அரண்களை அமைத்து வந்தது. சர்வதேசச் சட்டத்தின்படி பிலிப்பைன்ஸுக்குக் சொந்தமான கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ் மீனவர்கள் வரவிடாமல் விரட்டியடித்ததுடன், பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான குட்டித் தீவுகளையும் தனது என்று கோரி வருகிறது.
பதவிக்கு வந்த ஆரம்பத்தில் தனது சீன ஆதரவு காரணமாக அமெரிக்காவை உதைத்துத் தள்ளப் போவதாகப் பல தடவைகள் ஆர்ப்பரித்த டுவார்ட்டே சீனாவின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும், நாட்டு மக்களின் சீன எதிர்ப்பையும் கணக்கிலெடுத்துத் தன் போக்கை நாளடைவில் மாற்றிக்கொண்டார். அவரது அரசியல் அமெரிக்காவின் இராணுவப் பாதுகாப்பை நாடுவதாகவே கடந்த ஓரிரு வருடங்களில் மாறியிருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் இந்த இராணுவப் பயிற்சிக்கு, “தோளொடு தோள்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
விமானத்திலிருந்து கப்பல்களுக்கு இராணுவத்தை மாற்றுதல், விமானப் போர், கப்பல் போர், போர்க்கால மனிதாபிமான நடவடிக்கைகள் போன்று பல விடயங்களிலும் இந்தக் கூட்டுறவு இராணுவப் பயிற்சிகளின் போது இராணுவத்தினர் ஈடுபடுவார்கள். ஏப்ரல் 08 திகதிவரை இப்பயிற்சிகள் தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்