நாட்டின் அரசியல் போக்கை எதிர்த்துத் தனது பட்டங்களைத் துறந்தார் ஜோர்டான் இளவரசன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜோர்டான் அரச குடும்பத்தின் முக்கியத்துவர்களிடையேயான மனக்கசப்புக்கள் வெளியாயின. அரசன் அப்துல்லாவின் அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகச் சிலர் குற்றஞ்சாட்டப்பட்டனர். இளவரசர் ஹம்சா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். ஓரிரு வாரங்களின் பின்னர் இளவரசர் குற்றமற்றவர் என்று பிரகடனம் செய்யப்பட்டார். அத்துடன் முடிந்துவிட்டதாக வெளியுலகில் நம்பப்பட்ட ஜோர்டான் அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இளவரசர் ஹம்சா. ஞாயிறன்று அவர் தனது இளவரசர் பட்டத்தைத் துறந்திருப்பதாக அறிவித்தார்.

ஜோர்டான் அரசன் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவரில் இருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். – வெற்றிநடை (vetrinadai.com)

“தற்போதைய அரசியலின் குறிக்கோளும், அரச திணைக்களங்களின் நடத்தைகளும் எனது கோட்பாடுகளுக்கு உடன்படாதவை என்பதைப் புரிந்துகொண்டதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்,” என்று இளவரசர் ஹம்சா டுவீட்டியிருந்தார்.

கடந்த வருடம் போல ஹம்சா இத்தருணம் தனது ஒன்று விட்ட சகோதரன் அரசன் அப்துல்லாவை நேரடியாகக் குற்றஞ்சாட்டவில்லை. ஆயினும், அமைச்சுக்களையும், திணைக்களங்களின் நடவடிக்கைகளையும் சாடியிருப்பது மறைமுகமாக அரசன் அப்துல்லாவின் ஆட்சியைச் சாடுவதே என்று கணிக்கப்படுகிறது. அரச குடும்பத்தினரின் சார்பில் இதுவரை ஹம்சாவின் விமர்சனத்துக்கு எவ்வித பதில்களும் கொடுக்கப்படவில்லை.

கடந்த சுமார் 10 மாதங்களாக இளவரசர் ஹம்சா எந்தப் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *