நாட்டின் பொருளாதார நிலைமை நெருக்கடியாகியிருப்பதாக ரஷ்யப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார் பிரதமர்.
ரஷ்யாவின் பிரதமர் மிக்கேல் மிசுஸ்தின் நாட்டின் பொருளாதார நிலைமை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச ரீதியில் ரஷ்யா மீது செய்யப்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க ரஷ்யா தனக்குத் தேவையானவற்றைத் தானே தயாரிக்கும் நிலைமையை அடையவேண்டும் என்று குறிப்பிட்ட மிசுஸ்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார்.
“எம்முடன் இதுவரை நட்பாக இருந்த நாடுகள் இப்போது எங்களுடன் பொருளாதாரப் போரில் ஈடுபட்டிருக்கின்றன. எங்கள் நாட்டின் தொழில்துறை பலமாக இயங்கி வருகிறது. எனவே, நாம் ஏற்பட்டிருக்கும் நிலைமையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு எமக்கு அவசியமான பொருட்களை இங்கேயே தயாரித்துக்கொள்ளவேண்டும். அதற்காகத் தொடர்ந்தும் எங்களுடைய நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயற்பட்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்ட பிரதமர் அதுபற்றிய விபரங்களை முன்வைக்கவில்லை.
விமானப் போக்குவரத்து உட்பட உள்நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறைகளுக்கு அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவை விட்டு வெளியேறிவிட்ட அயல்நாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளைத் தொடர்ந்தும் செயற்படுத்த அரசு முயற்சித்து வருவதாகவும் வெளிநாட்டு அரசியல்வாதிகளின் முடிவுகளில் ரஷ்யா தங்கியிருக்கலாகாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சுமார் 1.4 பில்லியன் எவ்ரோ பெறுமதியான உதவித் திட்டங்கள் ரஷ்யாவின் தொழில்துறைக்கு மான்யங்களாக அறிவிக்கப்பட்டது. அது முன்னர் கொடுக்கப்பட்டு வந்த மான்யங்களை விட மூன்று மடங்கு அதிகமானது. பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு மாதாமாதம் சுமார் 100 எவ்ரோ பெறுமதியான உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்