பிரான்சில் நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் கால் பங்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை.
பிரான்சில் அடுத்த ஜனாதிபதி யாரென்று தேர்ந்தெடுக்கும் முதலாவது கட்ட வாக்கெடுப்பு ஞாயிறன்று நடக்கவிருக்கிறது. பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மான்வேல் மக்ரோன் இரண்டாவது தவணைக்காகப் போட்டியிடுகிறார். 20 வருடங்களாயிற்று பிரென்சுக்காரர் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை இரண்டாவது தடவையும் தேர்ந்தெடுத்து. அந்தத் தொடரை முறித்து இம்முறை மக்ரோன் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நடக்கவிருக்கும் தேர்தலைச்ச் சுமார் 27 % விகித வாக்காளர்கள் பகிஷ்கரிப்பார்கள் என்கின்றன தேர்தல் கணிப்பீடுகள்.
ஏப்ரல் 10 திகதி முதலாவது வாக்கெடுப்பு நடக்கும்போது அதில் 12 வேட்பாளர்கள் பங்கெடுக்கிறார்கள். அவர்களில் ஐந்து பேரே 10 விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறக்கூடியவர்கள் என்று கணிக்கப்படுகிறது. மக்ரோனைத் தவிர மரின் லி பென், ஜோன் லுக் மெலன்சோன், வலரி பெக்ரெஸ், எரிக் செம்மூர் ஆகியோரே அந்த ஐந்து பேராகும்.
கருத்துக் கணிப்பீடுகளில் ஆரம்பகாலத்தில் பெரும் இடைவெளியில் முதலிடத்தில் இருந்தவர் ஜனாதிபதி மக்ரோன் ஆகும். இரண்டாவது இடத்தில் மெலன்சோன், மரின் லூ பென் ஆகியோர் இருந்தனர். ஆனால், சமீப வாரங்களில் மரின் லூ பென் இரண்டாவது இடத்தைப் பலமாகத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி அவர் தனக்கும் மக்ரோனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்து முன்னேறிக்கொண்டும் இருக்கிறார்.
கொவிட் 19 தொற்றுக்காலம், உக்ரேன் மீதான போர் ஆகியவைகள் இருண்ட மேகங்களாகத் தேர்தல் வானில் பரவியிருக்கிறது. அதனால் வாக்காளர்கள் தொய்வடைந்திருப்பதாலேயே வாக்களிப்போர் விகிதம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 2002 இல் 28.4 % வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர்.
முதலாவது சுற்றில் எவரும் 50 % வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பம் இல்லாததால் ஏப்ரல் 24 ம் திகதியன்று நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்றுத் தேர்தலே முடிவை நிர்ணயிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்