கத்தாருடனான ஒப்பந்தங்களால் உலகக் கோப்பைப் பந்தயங்களின்போது ஈரானும் பலனடையும்.

நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பைகான போட்டிகளின் சமயத்தில் பலனடைய ஈரானும் திட்டமிட்டிருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருக்கும் தீவான கிஷ் இல் கத்தாருக்கு வரும் உதைபந்தாட்ட விசிறிகளைத் தங்கவரும்படி அழைக்கிறது ஈரான். அத்தீவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்த கத்தார் போக்குவரத்து அமைச்சர் ஈரானிய போக்குவரத்து அமைச்சருடன் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

ஈரானையும், கத்தாரையும் இணைக்கும் நிலக்கீழ் எரிவாயுக்குளாய் நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. – வெற்றிநடை (vetrinadai.com)

டொஹாவிலிருந்து 40 நிமிட விமானப் பயணம் அல்லது ஆறு மணி நேரக் கப்பல் பயணத்தில் கிஷ் தீவை அடையலாம். கத்தாரில் உலகக்கோப்பை மோதல்கள் நடக்கும் சமயத்தில் அங்கு வரும் விசிறிகள் கிஷ் தீவுக்குச் சென்று தங்கலாம். அத்தீவுக்கும் கத்தாருக்குமான போக்குவரத்து வசதிகளை அச்சமயத்தில் அதிகரிப்பதன் மூலம் அவர்களுடைய பயண வசதிகளை இலகுவாக்கலாம் என்பதே அவ்விரு நாடுகளின் திட்டமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளில் மிக அதிகமானவர்களை ஈர்க்கும் கிஷ் தீவு ஒரு சுதந்திர வர்த்தக வலயமாகும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பற்பல வசதிகளையும் கொண்ட அத்தீவில் 40,000 பேர் வசிக்கிறார்கள். அங்கே வருடாவருடம் வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியன் ஆகும். 

கிஷ் தீவுக்கு மட்டுமன்றி அதையடுத்துள்ள தீவுகளுக்கும் அச்சமயத்தில் பயணிகளை வரவழைப்பதன் மூலம் ஈரான் தனது சுற்றுலாத் துறையில் முன்னேற்றம் பெற விரும்புகிறது. ஈரானில் தங்குவது கத்தாரில் தங்குவதை விட மிகவும் மலிவானது. ஈரானிய ரியால் கடந்த வருடங்களில் அமெரிக்கா அந்த நாட்டின் மீது போட்டிருக்கும் தடைகளால் பெருமளவு மலிவாகியிருக்கிறது.

தற்போது தினசரி 72 விமானங்களால் இணைக்கப்பட்டிருக்கும் ஈரானுக்கும் கத்தாருக்கும் இடையே பந்தயம் நடக்கும் சமயத்தில் 100 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும். அத்துடன் ஈரான் அத்தீவுக்கும் டொஹாவுக்கும் இடையே சகல வசதிகளையும் கொண்ட பயணிகள் கப்பல்களையும் போக்குவரத்தில் ஈடுபடுத்தவிருக்கிறது.

உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்கக் கத்தாருக்கு வருகிறவர்களுக்கு ஈரானுக்குள் நுழைய விசா இல்லாமல் அனுமதி கிடைக்கும்படியும் ஒழுங்கு செய்யப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *