“ஜேர்மன் ஜனாதிபதியை வரவேற்கத் தயாராக இல்லை,” என்று முகத்திலடித்தது உக்ரேன்.
ஜேர்மனியின் முன்னாள் பிரதம அஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக் காலத்தில் இரண்டு தடவை வெளிவிவகார அமைச்சரக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர். அந்தச் சமயத்தில் தான் ரஷ்யாவிடம் ஜேர்மனியின் அரசியல், பொருளாதார உறவுகள் நெருக்கமாயின. அதன் ஒரு முக்கிய விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா எது செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமலிருக்கும் நிலைப்பாடு தொடர்ந்தது. எனவே, பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர் முன்னாள் ஜேர்மனியின் ரஷ்ய நட்பு அரசியலைப் பிரதிபலிப்பவர் என்பதால் உக்ரேனுக்கு அவர் திட்டமிட்ட விஜயத்துக்குப் பதிலாக, “உங்களுக்கு இங்கே வரவேற்புக் கிடையாது,” என்று பதிலளித்திருக்கிறது உக்ரேன் அரசு.
உக்ரேன் ஆக்கிரமிப்பை ரஷ்யா ஆரம்பிக்கும் வரை ஜேர்மனியத் தலைவர்கள் ரஷ்யாவுடனான தமது மென்மையான அரசியலையோ, நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகளையோ முறிக்கக் தயாராக இருக்கவில்லை. ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் தான் தற்போதைய பிரதமர் ஒலொவ் ஷொல்ட்ஸ் ஜேர்மனி – ரஷ்யா உறவில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தார்.
நோர்த்ஸ்டிரீம் 1,2 ஆகிய எரிவாயுக் குளாய்கள் ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடலுக்குக் கீழாக நேரடியாக ஜேர்மனிவரை திட்டமிட்டு நிறுவப்பட்டதும் ஸ்டெய்ன்மாயர் – மெர்க்கல் அரசு ஆட்சியிலிருந்த காலத்திலாகும். சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் தான் ஸ்டெய்ன்மாயர் தான் புத்தின் பற்றிப் போட்ட கணக்குத் தவறானது என்றும் தனது அரசியல் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.
“கியவ் நகருக்குச் சென்று ஐரோப்பியர்கள் நான் உக்ரேனுக்கு முழு ஆதரவையும் கொடுக்கிறோம் என்று சொல்ல விரும்பினேன், ஆனால், எனது வரவுக்கு அங்கே விருப்பம் தெரிவிக்கப்படவில்லை,” என்று ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மாயர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்