உக்ரேனின் துறைமுக நகரம் மரியபூல் பற்றிய இறுதிப் போர் நெருங்கிவருகிறது
கருங்கடலின் வடக்கேயிருக்கும் அசோவ் கடலின் துறைமுகமான மரியபூல் உக்ரேனின் பொருளாதாரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். சில வாரங்களாகவே அந்த நகரைக் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தாக்கிப் பெருமளவில் அழித்துவிட்டது ரஷ்யா. நகரின் பெரும்பாலான குடிமக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கே ஒளிந்திருக்கும் உக்ரேன் இராணுவத்தினர் மட்டுமே ரஷ்யப் படைகளை எதிர்த்து வருகிறார்கள்.
கிரிமியாவுக்கும், உக்ரேனிலிருந்து பிரிந்த டொம்பாஸ் பிராந்தியத்துக்கும் ரஷ்யர்களால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட கிரிமியாவுக்கும் இடையேயிருக்கும் மரியபூல் நகரைப் பிடித்தே ஆகுவது என்று முடிவுசெய்து தாக்கிவருகிறது ரஷ்யா. கடல் வழியாக அந்த நகருக்கு ரஷ்யாவின் இராணுவத்தினர் இறக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யா மரியபூல் நகரத்தினுள் நுழைந்து நடத்தப்போகும் தாக்குதல் அங்கே மிச்சமிருக்கும் உக்ரேனியர்களை அழிப்பதாகவே முடியும் என்று கணிக்கப்படுகிறது. உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கி “மரியபூல் நகரத்தில் மீதமிருக்கும் உக்ரேன் இராணுவத்தினரை அழிப்பதானால் போர் நிறுத்துவது பற்றிய் பேச்சுவார்த்தைகள் ஏதும் இனிமேல் தொடராது,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரஷ்யர்களோ ஞாயிறு காலை பத்து மணிக்குள் அங்கிருக்கும் உக்ரேன் இராணுவத்தினரனைவரும் சரணடையவேண்டும், என்றும் இல்லையேல் நகரத்தின் மீதான தாக்குதல் திட்டமிட்டது போல நடக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.
இரண்டு துறைமுகங்களையும் இரும்புத் தொழிற்சாலையொன்றையும் கொண்ட நகரம் மரியபூல். நகரின் 70 % கட்டடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சுமார் 20,000 பேர் அங்கே கொல்லப்பட்டிருப்பதாகவும் உக்ரேன் அரசின் செய்திகள் குறிப்பிடுகின்றன. சுமார் 250,000 பேர் வாழ்ந்து வந்த நகரம் மரியபூல். நகரின் மின்சாரம், நீர் போன்ற வசதிகளெல்லாம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்