போலந்து எல்லையை அடுத்திருக்கும் உக்ரேனின் லிவிவ் நகரைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணைக்குண்டுகள்.
உக்ரேனின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் தாக்குதல்கள் திசை மாறியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதுவரை தாக்குதல்களுக்குத் தப்பியிருந்த நகரமான லிவிவ் மீது ரஷ்யா ஐந்து ஏவுகணைக் குண்டுகளைச் செலுத்தியிருக்கின்றது. தலைநகரான கியவைச் சுற்றிவளைத்துப் பல வாரங்களாகத் தாக்கிய ரஷ்யர்கள் அம்முயற்சி வெற்றியளிக்காமல் பின்வாங்கியதும் அவர்கள் உக்ரேனின் கிழக்கையும், தெற்கையுமே அதிகமாகத் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல் தடவையாக லிவிவ் நகரில் ஐந்து பேர் ரஷ்யத் தாக்குதல்களால் இறந்திருப்பதாகவும் மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாகவும் லிவிவ் நகரச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகரின் இராணுவ முக்கியம் வாய்ந்த கட்டடங்கள் மற்றும் டயர் தொழிற்சாலையொன்றும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அதைத் தவிர வேறு உக்ரேனிய நகரங்களும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன. டொம்பாஸ் பகுதியும், சார்க்கிவ் நகரும் பெருமளவில் தாக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்களால் இதுவரை உக்ரேனில் நடந்துவந்த மனிதர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருப்பதாக உக்ரேன் அரசு தெரிவிக்கிறது. காரணம், லுகான்ஸ்க் பகுதியிலிருந்து அகதிகள் வெளியேற்றப்படும் சமயத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் அவர்களில் சிலர் இறந்தும் காயமடைந்தும் இருப்பதாலுமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்