பெரும் வெள்ளத்தையடுத்து தென்னாபிரிக்காவில் தேசிய பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணம் நாட்டின் சரித்திரத்தில் காணாத மோசமான பெருமழை, வெள்ளப்பெருக்கால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டது. துறைமுக நகரமான டர்பன் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது. பல விஞ்ஞானிகளும் எச்சரித்து வந்தது போலவே காலநிலை மாற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உண்டாகியது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சிரில் ரமபோசா செவ்வாய்க் கிழமையன்று நாடு முழுவதற்குமான தேசிய பேரழிவு நிலபலரத்தைப் பிரகடனம் செய்திருக்கிறார்.
குவாசுலு நதால் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் இறந்தவர்கள் 443 பேர் என்றும் 63 பேரைக் காணவில்லையென்றும் மீட்புப் பணியினரின் விபரங்களிலிருந்து தெரியவருகிறது. 10,000 இராணுவத்தினர் மீட்புப் பணியில் உதவுவதற்காகவும், காணாமல் போனவர்களைத் தேடுவதற்காகவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். 40,000 பேர் வீடிழந்திருக்கிறார்கள். மாகாணத்தில் 80 % நீர் விநியோகமும், மின்சார விநியோகமும் தடைப்பட்டிருக்கின்றன. பல பாலங்களும், வீதிகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
ஈஸ்டர் விடுமுறைக்குப் பின்பு செவ்வாயன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்தன. ஆனால், 600 பாடசாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 270,000 மாணவர்களுக்குப் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலைமை உண்டாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
அழிவுகளால் பாதிக்கப்பட்டவைகளை மீண்டும் கட்டியெழுப்ப அவசர நடவடிக்கையாக ஒரு பகுதி நிதியைக் கொடுத்துதவ ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். பாதிப்புக்குள்ளானவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதாக அவர் உறுதி கூறியிருக்கிறார். அவைகளின் பெறுமதி பல நூறு எவ்ரோக்கள் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்