காஸா பிராந்தியத்தைக் குறிவைத்து மீண்டும் தாக்குகிறது இஸ்ராயேல் ஒரு வருடத்தின் பின்னர்.
பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே ஜெருசலேம் கோவில் பகுதியில் ஏற்பட்டிருந்த மோதல்கள் காஸா பிராந்தியத்தை இஸ்ராயேலின் இராணுவம் தாக்குவதில் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழன்று அதிகாலையில் இஸ்ராயேலின் விமானப்படை காஸா பகுதியின் மீது குண்டுகளால் தாக்கியது.
புதனன்று மாலையில் இஸ்ராயேல் நகரொன்றின் மீது காஸாவிலிருந்து ஏவுகணைக் குண்டொன்று வீசப்பட்டது. குடிமக்கள் எவருமன்ற இடத்தில் விழுந்த அந்தக் குண்டால் மனிதர்களுக்கு எச்சேதமும் ஏற்படவில்லை. காஸா பிராந்தியத்தில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் தாம் இஸ்ராயேலைத் தாக்கியதாகவும், இராணுவ விமானங்களை நோக்கி ஏவுகணைக் குண்டுகளைச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்கள்.
ஆனால், அதற்குப் பதிலடியாக நள்ளிரவுக்குப் பின்னர் இஸ்ராயேல் காஸாவைத் தாக்கியது. காஸாவினுள் இருக்கும் இரகசிய சுரங்கப் பாதையையும் அங்கேயிருக்கும் ஏவுகணைக்கான எரிபொருள் தயாரிப்பு மையத்தையும் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ராயேல் இராணுவம் தெரிவித்தது.
ஜெருசலேமின் அக் அக்சா பள்ளிவாசலைச் சுற்றியிருக்கும் கோவில் வளாகத்தில் வன்முறைகள் தொடர்கின்றன. பள்ளிவாசலுக்குள்ளிருந்து ஒரு கும்பல் உள்ளே வணங்க வருபவர்கள் மீது எறிகுண்டுகளை வீசி வருவதாக இஸ்ராயேல் பொலீஸ் தெரிவித்தது. அங்கிருந்து ஏழு பாலஸ்தீனர்களைக் கைது செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
ஜெருசலேமில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளை நோக்கித் தாக்குவதற்காக வந்துகொண்டிருந்த யூதத் தீவிரவாதக் கும்பலை வழியில் தடைகள் போட்டு இஸ்ராயேல் பொலீஸ் தடுத்து வருகிறது. இரண்டு பகுதியின் தீவிரவாதக் குழுக்கள் ஏற்படுத்தி வரும் கலவரங்களில் கடந்த நாலு வாரங்களாக இறந்தவர் எண்ணிக்கை 36 ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்