கட்டாய ஊழியத்தைத் தடுக்கும் இரண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை சீனா அங்கீகரித்திருக்கிறது.
சீனாவின் ஷிங்ஷியாங் பிராந்தியத்தியம் உட்பட வேறுபகுதிகளிலும் குறிப்பிட்ட சிறுபான்மையினர் கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேற்கு நாடுகளும், ஐ.நா-வும் நீண்ட காலமாகவே சீனாவை விமர்சித்து வந்தன. அதற்குப் பதிலளிப்பது போல புதனன்று சீனா சர்வதேசத் தொழிலாளர் நலச் சட்டங்கள் இரண்டை அங்கீகரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
சீனாவின் ஷிங்ஷியாங் பிராந்தியத்தில் வாழும் சிறுபான்மையினரான உகூரர்களும், நாட்டின் துருக்கி பேசும் முஸ்லீம் சமூகத்தினரும் சீன அரசால் திட்டமிட்டு நடத்தபடும் கட்டாயத் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே தமது சாதார்ண வாழ்க்கை முறைகளைக் கைவிட்டுச் சீன அரசின் கோட்பாடுகளின்படி வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று நீண்ட காலமாகவே மனித உரிமை அமைப்புக்களும், ஐ.நா-வும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அந்த முகாம்களில் வாழும் சமயத்தில் அவர்கள் அடிமைகள் போன்று கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் பல சாட்சியங்கள் வெளிவருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து சீனா குறிப்பிட்ட இனங்களுக்கு எதிராக நடத்திவரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும், இன ஒழிப்பும் நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரப்படுகின்றன. இதைக் காரணம் காட்டி சீனா மீது வர்த்தகக் கட்டுப்பாடுகள் சிலவும் போடப்பட்டிருக்கின்றன.
நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதம் பரவாதிருக்கவே சமூகத்தின் கோட்பாடுகளுக்கு உட்படாமல் வாழ்ந்து வரும் சிறுபான்மையினத்தவரை தொழில்துறை, கல்வி முகாம்களுக்கு அனுப்பி அங்கே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவே குறிப்பிட்ட முகாம்கள் நடத்தப்படுவதாகச் சீன அரசு குறிப்பிட்டு வருகிறது. அங்கே கட்டாய ஊழியம் எவர் மீதும் திணிக்கப்படவில்லை என்று சீன அரசு கடுமையாக மறுத்தே வருகிறது.
புதன்கிழமையன்று சீனாவின் உயர்மட்ட அதிகாரம் நாட்டில் கட்டாய ஊழியத்துக்கு எவரும் திணிக்கப்படுதல் குற்றம், கட்டாய ஊழிய ஒழிப்பு ஆகிய இரண்டு சர்வதேசத் தொழிலாளர் நலச் சட்டங்களை அங்கீகரித்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் குறிப்பிட்ட சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் அவைகளைத் தமது நாட்டில் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். ஐ.நா-வின் மனித உரிமை அமைப்பின் உயரதிகாரி மிஷல் பஷலெட் விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். அச்சமயம் அவர் ஷிங்ஷியாங் பிராந்தியத்திற்கு விஜயம் செய்து அங்கிருக்கும் குறிப்பிட்ட “சீன தொழில்கல்வித்துறை முகாம்களைப்” பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்