சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா சீனர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை நிறுத்தியது.
2020 இல் சீனாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளால் அங்கே உயர்கல்வி கற்றுவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பவேண்டியதாயிற்று. அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரச் சீனா அனுமதிக்கவேண்டும் என்று கோரிவரும் இந்திய அரசுக்குச் சீனா செவிகொடுக்க மறுப்பதால் சீனர்களுக்கான சுற்றுலா விசா கொடுப்பனையை இந்தியா நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கிறது.
தாய்லாந்து, சிறீலங்கா, பாகிஸ்தான் நாட்டு மாணவர்களை மீண்டும் சீனாவுக்கு வந்து தமது கல்வியைத் தொடர அனுமதித்திருக்கும் சீனா இந்தியாவின் சுமார் 23,000 மாணவர்களை அங்கே மீண்டும் அனுமதிப்பது பற்றி எவ்வித முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்த்து வருகிறது. சீனாவில் வர்த்தகங்கள் செய்துவந்த இந்தியர்கள், ஊழியர்களாக இருந்த இந்தியர்கள் அவர்களுடைய குடும்பங்களையும் சீனா இன்னும் திரும்பிவர அனுமதிக்கவில்லை.
அத்துடன் துண்டிக்கப்பட்ட சீனா – இந்தியாவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தையும் மீண்டும் ஆரம்பிக்கச் சீனா தயாராக இல்லை. சீனா தொடர்ந்தும் தனது கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதால் சிறிய அளவிலான மாணவர்களுக்கு மட்டும் அங்கே திரும்பி வந்து கல்வியைத் தொடர அனுமதித்திருப்பதாகச் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த சீனாவின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். சீனாவிலிருக்கும் இந்தியத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்கள், ஊழியர்கள், வர்த்தகர்கள் பற்றிய முடிவையும் விரைவில் எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் உறுதி கூறியிருந்தார்.
ஆனால், தொடர்ந்து அவ்விடயம் புறக்கணிக்கப்பட்டு வருவதாலேயே இந்தியா தன் பங்குக்குச் சீனருக்கான சுற்றுலா விசாக்களை நிறுத்தியிருக்கிறது. ஏற்கனவே கொடுக்கபட்டவையும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் சீனாவின் வர்த்தகர்கள், ஊழியர்கள், மாணவர்கள், ராஜதந்திரிகளுக்கான விசாக்களை இந்தியா கொடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்