உக்ரேன் ஆக்கிரமிப்பைப் போற்றும் சின்னங்களை சட்டவிரோதமாக்கிய மோல்டோவா அரசை மிரட்டுகிறது ரஷ்யா.

ரஷ்யாவுக்கும் ருமேனியாவுக்கும் நடுவேயிருக்கும் குட்டி நாடான மோல்டோவா உக்ரேனுக்கு அடுத்தபடியாகத் தம்மை ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்று பயந்து வாழும் நாடாகும். நாட்டின் ஜனாதிபதி மாயா சாந்து இவ்வார ஆரம்பத்தில் மோல்டோவாவுக்குள் பகிரங்கமாக ரஷ்யாவின் வெற்றிச் சின்னமான புனித ஜோர்ஜ் அடையளத்தையோ அதன் கறுப்பு-ஒரேஞ்ச் வரிகளிலான சின்னங்களையோ பாவிப்பது சட்டத்துக்கு விரோதமானது என்று தடை செய்திருக்கிறார். அதை ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் காரியதரிசி மரியா சக்கரோவா மிரட்டலுடன் கண்டித்திருக்கிறார்.

“மற்றவர்களின் வாழ்வுக்காக எந்தச் சின்னத்தை அணிந்து சிலர் தமது உயிரை அர்ப்பணித்தார்களோ, அதைத் தடுப்பவர்கள் சரித்திரத்தின் குப்பை மேட்டில் வீசப்படுவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்,” என்று கூறிய சக்கரோவா “அதைச் செய்யும் துரோகிகள் வேதனையான முடிவை அடைவார்கள்,” என்றும் எச்சரித்தார். 

அதையே மேலும் ஒரு ரஷ்ய செனட்டரும் குறிப்பிட்டு மோல்டோவாவின் ஜனாதிபதியை எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்.  

“நாங்கள் தடை செய்திருக்கும் சின்னங்கள் 77 வருடத்துக்கு முன்னைய இரண்டாம் உலக யுத்தத்தில் நடந்ததை நினைவுபடுத்தவில்லை. அவை உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைப் பிரதிபலிக்கின்றன,” என்று ஜனாதிபதி சாந்து சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் நாஸி படைகளை வென்றதை மே 9 ம் திகதி ரஷ்யா வருடாவருடம் பெரிய அளவில் நினைவு கூருகிறது. மோல்டோவாவில் ரஷ்யாவை அண்டி வாழவேண்டும் என்று கோரும் அரசியல்வாதிகள் அதை மோல்டாவிலும் கொண்டாடி ஊர்வலம் போவதுண்டு. அச்சமயத்தில் அவர்கள் புனித ஜோர்ஜின் கறுப்பு-ஒரேஞ்ச் நிற வரிகளிலான சின்னத்தைப் பாவிப்பதுண்டு. அந்த நாள் நெருங்கி வருவதை ஒட்டியே ஜனாதிபதி குறிப்பிட்ட தடையை அறிவித்திருக்கிறார்.

மோல்டோவாவின் ரஷ்ய ஆதரவு அரசியல்வாதிகள் சட்டத்தைப் புறக்கணித்து அந்தச் சின்னங்களை அணிந்து ஊர்வலம் போக வரும்படி தமது ஆதரவாளர்களிடையே அழைப்பு விடுத்திருக்கிறர்கள். மோல்டாவிய நீதியமைச்சர் சட்டத்தை மீறுகிறவர்களைத் தண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மோல்டோவாவின் ரஷ்யத் தூதுவரை நாட்டின் வெளிவிவகார அமைச்சு அழைத்து, ரஷ்ய அரசியல்வாதிகள் தமது நாட்டின் அரசியலுக்குள் மூக்கை நுழைப்பதுடன் ஜனாதிபதியை மிரட்டுவதையும் கண்டித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *