அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சர்கள் உக்ரேனுக்குச் செல்கிறார்கள்.
பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நுழைந்தபோது உக்ரேன் என்ற நாடு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்ற கேள்வியே உலகெங்கும் கேட்கப்பட்டது. உக்ரேனியர்களின் பாதுகாப்பு ஆவேசம் ரஷ்யர்களால் அவர்களை ஒழிக்க முடியாத்தாக்கிவிடவே உலகின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் உக்ரேனுக்கு விஜயம் செய்வது சமீப வாரங்களில் சாதாரணமாகிவிட்டடு. அவ்வரிசையில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் உக்ரேனுக்கு ஞாயிறன்று விஜயம் செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் உக்ரேனுக்கு வேண்டிய ஆயுதங்கள் எவையென்று அறிந்து கொண்டு அவற்றை அவர்களுக்குக் கொடுப்பதாகும்.
முதல் தடவையாக ஆக்கிரமிப்பு ஆரம்பித்தபின் அமெரிக்காவிலிருந்து உக்ரேனுக்குச் செல்லும் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் இவ்விருவருமே. அவர்கள் விஜயம் பற்றி அமெரிக்க அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையிலும் குறிப்பிடவில்லை
அதேசமயம் சனிக்கிழமையன்றும் உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தொடர்கிறது. சுற்றிவளைக்கப்பட்டுள்ள மரியபூல், தெற்கிலிருக்கும் மேலுமொரு முக்கிய துறைமுக நகரான ஒடெஸ்ஸா ஆகியவை கடுமையாகத் தாக்கப்பட்டன. மரியபூல் நகரின் இரும்புத் தொழிற்சாலை ஒன்றினுள் சுமார் 1,000 பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஒளிந்திருக்கிறார்கள். அதனுள் இருக்கும் உக்ரேனிய இராணுவத்தினர் மட்டுமே அந்த நகரில் மிச்சமாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அந்தத் தொழிற்சாலையைத் தாக்க வேண்டாம் என்று புத்தின் உத்தரவிட்டிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஷ்யச் செய்திகள் குறிப்பிடிருந்தன. ஆனால், அதற்குள்ளேயோ, வெளியேயோ எந்த ஒரு ஜந்தும் அசையலாகாமல் பாதுகாக்கும்படி புத்தின் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
தெற்குக் கோடியிலிருக்கும் ஒடெஸ்ஸா நகரம் ஏழு ஏவுகணைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக உக்ரேன் செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றால் ஒரு வயதாகாத குழந்தை உட்பட எட்டுப் பேர் இறந்ததாகவும் தெரிகிறது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவைகளல் உக்ரேனுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களில் பல அந்த நகரில் பாதுகாக்கப்படுவதாக ரஷ்யச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்