இருபது வருடங்களுக்குப் பின்னர் பிரான்சில் பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதி வென்றிருக்கிறார்.
ஞாயிறன்று பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வென்று மேலுமொரு தவணை ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். இரவு எட்டு மணிக்கு வாக்குச்சாவடி கணிப்பீடுகள் வெளிவந்தபோது 58.2 % வாக்குகளை அவரும், 41.2 % விகிதத்தை எதிர்த்து நின்ற மரின் லி பென்னும் பெற்றதாகத் தெரியவந்தது. பின்னிரவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தபோதும் கிட்டத்தட்ட அதேயளவு விகிதத்தையே வேட்பாளர்களிருவரும் பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது.
வாக்குச்சாவடிக் கணிப்பீடுகள் பிரான்சில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தெளிவாகக் கணித்து விடுகின்றன. எனவே, அது வெளிவந்ததை அடுத்து மரின் லி பென் தனது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் கூடியிருந்த இடத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மக்ரோனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவரது தோல்வியால் மனமுடைந்த வாக்காளர்களை உற்சாகப்படுத்தி, “இது தோல்வியல்ல எங்கள் இயக்கம் முன்னேறி வருவதன் அடையாளமான வெற்றியே,” என்று அவர் குறிப்பிட்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். இது அவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் மூன்றாவது தடவையாகும். ஒவ்வொரு தடவையிலும் அவருக்கான ஆதரவு அதிகரித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இம்மானுவேல் மக்ரோனின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் பலரும் தமது வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள். ஈபல் கோபுரத்தின் அருகே தனது ஆதரவாளர்களை அவர் தேர்தல் முடிவுகள் வந்ததும் சந்தித்து நன்றி தெரிவித்தார். லி பென்னுக்கு வாக்களித்தவர்களை அவர் குறிப்பிட்டபோது ஆதரவாளர்கள் ஏளனக்குரல் கொடுத்ததை அவர் இடைமறித்தார்,
“இனிமேல் நான் உங்கள் வேட்பாளர் மட்டுமல்ல அவர்களின் ஜனாதிபதியும் கூட. எனவே, அவர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளையும் தீர்க்கப் பாடுபடுவேன். நாம் ஐரோப்பாவைப் பலப்படுத்துவோம், பிரான்ஸ் குடியரசு வாழ்க,” என்று பொறுப்புணர்வுடன் குறிப்பிட்டார்.
தனக்கு வாக்களித்தவர்களில் தனது கோட்பாடுகளுக்கு ஆதரவானவர்கள் மட்டுமன்றி இடதுசாரிகளும், சூழல் பேணும் ஆதரவாளர்களும் இருப்பதை அவர் புரிந்துகொண்டே தனது வெற்றிப் பேச்சில் அடக்கமான நிலைப்பாட்டைக் காட்டியதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
ஜூன் மாதத்தில் பிரான்சில் பாராளுமன்றத் தேர்தலை அவர் எதிர்நோக்கவிருக்கிறார். நாட்டின் பொருளாதார பலத்தை அதிகரிப்பதற்காக ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்த எண்ணியிருக்கும் அவருக்கு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்