மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்திரியாவுக்குள் நுழைய ரஷ்யாவின் போர்த் திட்டம் தயாராகியிருக்கிறதா?
சுமார் 2.6 மில்லியன் குடிமக்களைக் கொண்ட குட்டி நாடு மோல்டோவா. உக்ரேனுக்கும், ருமேனியாவுக்கும் இடையே இருக்கும் மோல்டோவாவில் உக்ரேன் எல்லையை அடுத்துள்ள குட்டிப் பிரதேசம் டிரான்ஸ்னிஸ்திரியா. 470,000 குடிமக்களைக் கொண்ட அப்பிராந்தியம் 1990 லேயே தன்னைத் தனிக் குடியரசாகப் பிரகடனம் செய்திருப்பினும் இதுவரை ஐ.நா-விலோ, அல்லது மற்றைய நாடுகளாலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1930 ம் ஆண்டுக்காலத்தில் சோவியத் யூனியனுக்குள் சுயாட்சியுடனிருந்த பகுதி டிரான்ஸ்னிஸ்திரியா. நாட்டின் முக்கால் பங்குக் குடிமக்கள் ரஷ்யர்கள் அல்லது உக்ரேனியர்கள். மிச்சப்பேரே மோல்டாவாவைச் சேர்ந்தவர்கள். சோவியத் 1990 இல் பிளவுபட்டு வெவ்வேறு நாடுகளாகிப் போனதிலிருந்தே அப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் தாம் சுயாட்சிப் பிராந்தியமாகி ரஷ்யாவுடன் சேரவேண்டுமென்று விரும்புகிறவர்கள். மோல்டோவா அப்பகுதியைத் தனதென்று குறிப்பிட்டாலும் கூட அவ்விடயத்திலிருக்கும் அரசியல் சிக்கலால் இதுவரை பல தடவைகள் சிறு சிறு ஆயுதத் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
டிரான்ஸ்னிஸ்திரியாவிலிருக்கும் தமது மக்களைப் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டு ரஷ்யா அங்கே தனது 1,500 இராணுவத்தினரை வைத்திருக்கிறது. அது அமைதி காக்கும் படை என்று ரஷ்யாவால் குறிப்பிடப்படுகிறது. சமீப வாரங்களில் ரஷ்யாவுக்கும் மோல்டோவாவுக்கும் இடையே மூர்க்கமான வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
உக்ரேனின் தெற்குப் பாகத்திலிருக்கும் ஒடெஸ்ஸா துறைமுகத்தை ரஷ்யா சமீப வாரங்களில் தாக்கி வருவதற்குக் காரணம் அதன் மூலமாக நுழைந்து டிரான்ஸ்னிஸ்திரியாவிலிருக்கும் தனது இராணுவத்துடன் சேர்ந்து மோல்டோவாவைக் கைப்பற்றும் எண்ணத்திலா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் திங்கள்கிழமை மாலையில் டிரான்ஸ்னிஸ்திரியாவில் அதிகாரத்திலிருக்கும் அரசு தனது பாதுகாப்பு அமைச்சுக் கட்டடம் ஏவுகணைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறது. அதனால் இறப்புக்களோ, காயப்பட்டவர்களோ பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கட்டடத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைக்காவிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் டிரான்ஸ்னிஸ்திரியா செய்திகள் தெரிவிக்கின்றன.
மோல்டோவாவின் ஜனாதிபதி அச்சமயத்தில் ஒரு முக்கிய கூட்டத்தில் பங்குபற்றிக்கொண்டிருந்தார். டிரான்ஸ்னிஸ்திரியாவில் நடந்தது பற்றி விவாதிக்க இன்று பிற்பகலில் பாதுகாப்புச்சபை கூடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணம் டிரான்ஸ்னிஸ்திரியாவில் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாகக் கூறி அதற்குள் மூக்கை நுழைக்க ரஷ்யா செய்யும் தந்திரமாக இருக்கலாம் என்று மோல்டோவாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த வாரம் ரஷ்யாவுக்கும், மோல்டோவாவுக்கும் ஏற்பட்டிருந்த அரசியல் வாக்குவாதங்களில் “வேறு பிராந்தியங்களில் வாழும் எங்கள் மக்களுக்குப் பாதுகாப்புப் பற்றிய அச்சங்கள் எழுந்தால் அங்கே நாம் தலையிடுவோம்,” என்று ரஷ்ய உயர்மட்டத்தில் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்