சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கருகே விமானத்தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேரை அழித்தது இஸ்ராயேல்.
புதனன்று காலையில் இஸ்ராயேலின் போர் விமானங்கள் சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தின. சிரியாவின் அரசுக்கு உதவிவரும் ஈரானிய இராணுவத்தினரையும் குறிவைத்தே இஸ்ராயேல் அங்கு தாக்குதல்களை நடத்திவருகிறது. இவ்வருடத்தில் நடந்த தாக்குதல்களில் அதிமானோரைக் கொன்றதாகக் குறிப்பிடப்படும் இத்தாக்குதல்கள் மூலம் ஐந்து சிரிய இராணுவத்தினர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகச் சிரிய இராணுவச் செய்திகள் குறிப்பிட்டிருக்கின்றன. இஸ்ராயேல் எதுவும் இதுவரை குறிப்பிடவில்லை.
ஈரானை ஜென்ம எதிரியாக நினைக்கும் இஸ்ராயேல் போலவே ஈரானும் அரசியலில் செயற்பட்டு வருகிறது. சிரியாவின் ஜனாதிபதி அல்ஆஸாத்துக்கு எதிராக நாட்டினுள் பல குழுக்களும் தலையெடுத்தபோது அல் ஆஸாத்துக்கு முக்கிய ஆதரவாகத் தனது இராணுவத்தினரையும், ஆயுதங்களையும் ஈரான் கொடுத்துதவியது. இஸ்ராயேலின் எல்லையில் இருக்கும் சிரியாவின் வழியாக இஸ்ராயேலைத் தாக்க ஈரான் முயற்சிக்கும் என்ற ஊகத்தில் சிரியாவுக்குள் நுழைந்து அங்கே ஈரானிய இராணுவத்தையும் முகாம்களையும் தாக்க இஸ்ராயேல் தயங்குவதில்லை.
புதனன்று நடந்த தாக்குதல் முதலாவதல்ல. 2011 இல் சிரியாவின் உள்ளே போர் மூண்ட காலத்திலிருந்து இஸ்ராயேல் சிரியாவுக்குள் நூற்றுக்கணக்கான குறிவைத்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அல் கட்ஸ் அமைப்பு என்ற பெயரில் ஈரானின் வெளிநாட்டு இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் படைகள் பல தடவைகளிலும் தாக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்