தமது அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி உலக நாடுகளை வேண்டிக்கொள்கிறார் தலிபான்களின் தலைவர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் இராணுவம் வெளியேறியதும் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான் இயக்கத்தின் அரசை எந்த ஒரு உலக நாடும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மாற்றித் தங்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ளும்படி அவ்வியக்கத்தின் ஆன்மீக உயர்தலைவர் ஹிபதுல்லா அகுந்சாடா வேண்டிக்கொண்டிருக்கிறார்.
ரமழான் நோன்பை முடித்தபின் கொண்டாடும் ஈத் பெருநாள் வேண்டுகோளாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் அச்செய்தியில் என்ன காரணங்களுக்காகத் தலிபான்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களோ, அவைகளில் மாற்றம் கொண்டுவருவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் வெவ்வேறு குழுக்களை ஆட்சியிலிருந்து ஒதுக்கிவைத்தமை, பெண்களுக்கான சமூக உரிமைகளை மறுத்துவருதல், சிறுமிகளின் பாடசாலைகளைத் திறக்க மறுத்தல் ஆகியவையை மாற்றிக்கொள்ளும்வரை எந்த ஒரு நாடும் தலிபான்களை ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
தமது ஆட்சியை முதலில் அங்கீகரிக்கும் பட்சத்தில் நாட்டின் பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றி ராஜதந்திர உறவுகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்கிறது அகுந்சாடாவின் செய்தி.
“உலகம் ஒரு சிறிய கிராமம் போல நெருங்கிவிட்டிருக்கிறது. அமைதியும், ஸ்திரமான நிலைப்பாடும் கொண்ட ஆப்கானிஸ்தான் உலகின் ஒரு பாகம். எனவே ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிராத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டு அதன் ஆட்சியை அங்கீகரிக்கவேண்டும்,” என்று அந்தச் செய்தி மேலும் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்