யேமனில் போரிடுபவர்கள் போர் நிறுத்தத்த உடன்படிக்கை ஒன்றைக் கடைசி நிமிடங்களில் உண்டாக்கிக்கொண்டனர்.
ஐ.நா-வால் சில நாட்களாகக் கடுமையாக எச்சரிக்கப்பட்ட யேமன் போர் உடன்படிக்கை முறிவு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. போரில் ஈடுபட்டிருக்கும் பகுதியினர் தொடர்ந்தும் பெரும் முன்னேற்றங்கள் எதையும் சமாதானத்தை நோக்கிச் செய்யவில்லை என்றாலும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கொள்ளச் சம்மதித்தார்கள்.
எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன யேமனில் போர் ஆரம்பித்து. உலகெங்கும் நடக்கும் போர்கள் எல்லாவற்றையும் விடப் படு மோசமான விளைவுகளை உண்டாக்கியிருக்கும் போர் என்று யேமனில் நடக்கும் போர் குறிப்பிடப்படுகிறது. ஈரானால் ஆதரிக்கப்படும் ஹுத்தி இனத்தினரின் இயக்கத்தினர் அங்கே சவூதி அரேபியாவால் ஆதரிக்கப்படும் அரசின் படைகளுடன் போரிடுகின்றனர். அவர்களிருவரையும் தவிர வெவ்வேறு சிறு இயக்கங்களும் ஆங்காங்கே பிராந்தியப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
150,000 பேருக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். சுமார் நான்கு மில்லியன் பேர் தமது வீடு வாசல்களை இழந்து நாட்டுக்குள் அகதிகளாகியிருக்கிறார்கள். சமாதானத்தை நோக்கி எந்த நகர்வும் ஏற்படாவிட்டாலும் முதல் தடவையாக யேமன் மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் காணாத அமைதியை இப்போது தான் அனுபவித்து வருவதாக ஐ.நா-வின் தூதுவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்