ஜூன் 02 யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான போர் நிறுத்தத்தின் கடைசி நாள்.

ரம்ழான் நோன்பை ஒட்டித் தொடங்கிய யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதி நாள் நெருங்கிவிட்டது. இரண்டு மாதங்களாகச் சவூதியக் கூட்டணியும், யேமனின் ஹூத்தி இயக்கத்தினரும் ஐ.நா-வின் உதவியுடன் பெருமளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன் கடைசி நாள் ஜூன் 02 ஆகும். ஆனால், இதுவரை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று பேச்சுவார்த்தையின் நடுவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் இல்லாததால் ஜூன் 02 ம் திகதி போர் நிறுத்தம் முடிவடையும்போது மீண்டும் நிலைமை மோசமடையலாம் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு எச்சரித்திருக்கிறது. ஐ.நா-வின் தூதர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் தரப்பினரிடம் போர் நிறுத்தக் காலத்தை நீட்டிவைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை நெருங்குவதற்கு ஹூத்தி இயக்கத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் தாய்ஸ் நகரைத் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அது இதுவரை வெற்றிபெறாத நிலையில் போர் நிறுத்த நிலைப்பாடு எந்த நிமிடத்திலும் முடிவடையலாம் என்று ஐ.நா-வின் பேச்சாளர் எச்சரிக்கிறார். ஹூத்தி இயக்கத்தினர் தாம் போர் நிறுத்தத்தைத் தொடரவிருப்பதாகச் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்கள்.

தாய்ஸ் நகரம் 2015 லிருந்து சுற்றிவளைக்கப்பட்டிருப்படால் அங்கே வாழ்பவர்கள் நீண்ட காலமாக மனிதாபிமான உதவிகளைப் பெறுவதும் தடைப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அந்த நகர மக்கள் முற்றுக்கையை நிறுத்தும்படி கோரி ஊர்வலம் நடந்தினார்கள். இதுவரை ஹுத்தி இயக்கத்தினர் அதற்குச் செவி சாய்க்கவில்லை.

போர் நிறுத்தத்தின் நல்ல விளைவாக 2016 இன் பின்னர் முதல் தடவையாக சனாவிலிருந்து ஒரு விமானம் ஜோர்டானின் தலைநகருக்கு 126 பேரையும் ஏற்றிக்கொண்டு பறந்தது. அதையடுத்து மேலும் ஐந்து விமானங்கள் அம்மானுக்குப் பறந்திருக்கின்றன. புதனன்று 77 பேரைக் கொண்ட விமானமொன்று கெய்ரோவுக்குப் பறந்திருக்கிறது. 

அதைத் தவிர ஹூத்தி போராளிகளின் வசமிருக்கும் ஹுடெய்டா துறைமுகத்திற்கு பெற்றோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *