தென்னாபிரிக்காவின் வளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டிய குப்தா சகோதர்கள் எமிரேட்ஸில் கைது.
தென்னாபிரிக்காவில் 2009 – 2018 வரை ஜனாதிபதியாக இருந்த யாக்கோப் ஸூமாவுடன் நெருங்கி உறவாடி நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் மற்றும் அத்துல் குப்தா சகோதரர்கள். இந்தியர்களான குப்தா சகோதர்கள் தென்னாபிரிக்காவின் குடிமக்களாகினார்கள். 2018 இல் லஞ்ச ஊழல்கள் காரணமாக ஸூமா பதவியிலிருந்து இறங்கியதும் குப்தா சகோதர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.
எமிரேட்ஸ் அரசு குப்தா சகோதர்களைத் தமது நாட்டில் கைது செய்திருப்பதாகத் தென்னாபிரிக்காவுக்கு அறிவித்திருக்கிறது. சர்வதேச பொலீஸ் அமைப்பினாலும் தேடப்பட்டு வந்த அவர்களைக் கைது செய்து தென்னாபிரிக்காவுக்குக் கையளிக்கத் தாம் தயாராக இருப்பதன் மூலம் தமது அரசு கறுப்புப் பண ஒழிப்பு, குற்றவாளிகள் ஒளிக்க இடம் கொடாமலிருத்தல் போன்றவற்றில் ஒத்துழைப்பதாக எமிரேட்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.
1990 களின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற குப்தா சகோதர்கள் அங்கே சுரங்கங்கள், ஊடகத்துறை, கணனித்துறை ஆகியவற்றில் முதலீடுகள் செய்து படு வேகமாக நாட்டில் பெரும் பணக்காரர்களாகினார்கள். ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் குலாவி, லஞ்சங்கள் கொடுத்து அரசுக்கான பல சேவைகளைக் கொடுப்பதிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.
தமது அரசியல் தொடர்புகள், பணபலம் ஆகியவற்றைப் பாவித்து அவர்கள் அரசாங்கத்தையே தமது கைகளுக்குள் வளைத்துப் போட்டிருந்ததாக அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றி விசாரித்த குழுவினால் பின்னர் குறிப்பிடப்பட்டது. முக்கியமாக குப்தா சகோதர்களின் வாக்கு ஜனாதிபதி ஸுமாவின் வாக்குக்கு இணையானது. அவர்களின் உதவியுடன் ஸூமா நடத்திவந்த லஞ்ச ஊழல் விபரங்களால் கொதித்தெழுந்த மக்கள் ஸூமாவை பதவி விலக வைத்தார்கள்.
தென்னாபிரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் எமிரேட்ஸ் அரசு குப்தா சகோதர்களை எந்த வகையில் தென்னாபிரிக்காவுக்குக் கையளிப்பது என்று தீர்மானிக்கும். தம் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்காக குப்தா சகோதரர்கள் தென்னாபிரிக்காவின் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படுவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்