ருவாண்டாவுக்கு நாளை ஐக்கிய ராச்சியத்திலிருந்து 8 அகதிகள் தான் பறக்கவிருக்கிறார்களா?
திட்டமிடப்பட்டது போல ஐக்கிய ராச்சியத்தால் ஜூன் 14 ம் திகதி கடல் வழியாக வந்த அகதிகளைச் சுமந்துகொண்டு விமானம் பறக்குமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் தொடர்ந்தும் அந்தத் திட்டத்தைக் கைவிடாமலிருக்கிறார். அத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியான நீதிமன்ற வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஆயினும், தனித்தனியாக 23 அகதிகளின் மேன்முறையீடுகளால் அவர்களின் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ருவாண்டாவுக்கு முதல் கட்டத்தில் அனுப்பப்பட இருந்தவர்கள் கடல் வழியாக ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழைந்தவர்கள் 37 பேராகும். அவர்களில் 8 பேரின் பயணங்கள் மட்டுமே இதுவரை நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில், அந்தப் பயணம் நாளை நிறுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு, அம்னெஸ்டி உட்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்துவரும் அந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ருவாண்டாவும், ஐக்கிய ராச்சியமும் தொடர்ந்தும் சாதித்து வருகின்றன. மனிதக் கடத்தல்காரர்களால் தமது நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அகதிகளுக்கு இந்தத் திட்டம் மூலம் ஒரு தெளிவான செய்தியைச் சொல்ல விரும்புவதாக ஐக்கிய ராச்சியம் குறிப்பிடுகிறது.
ஐக்கிய ராச்சியத்தைத் தவிர ருவாண்டாவும் நீண்ட காலமாக ருவாண்டாவுடன் அதே போன்ற ஒரு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான ஒரு சட்டம் பாராளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ருவாண்டாவுடன் ஒரு கடைசி ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்