சர்க்கரைக் கொள்வனவைக் குறைக்கச் சொன்ன இம்ரான் அரசும், தேநீர் குடிப்பதைக் குறைக்கச்சொல்லும் ஷரீப் அரசு.
பாகிஸ்தானில் ஆட்சியிலிருந்த இம்ரான் கான் அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது ஷெபாஸ் ஷரீப் கட்சிக் கூட்டணி. அக்கட்சியின் அமைச்சரான அஷான் இக்பால் புதனன்று நாட்டு மக்களிடம், தேநீர் இறக்குமதிக்காகவும் அரசு கடன் வாங்கி அன்னியச் செலாவணியைப் பாவிக்க வேண்டியிருப்பதால் அந்தப் பானத்தைக் குறிப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
அதலபாதாளத்தை நோக்கி நிறுத்தும் பொறியேதுமின்றி விழ்ந்துகொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தடுக்க முடியாததாலேயே இம்ரான் அரசு மக்களிடம் ஆதரவை இழந்து கவிழ்க்கப்பட்டது. ‘அதைச் சரிசெய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் நிலைமை மேலும் வேகமாக மோசமடைந்து வருவதை’ தேநீரைக் குறைத்துக்கொள்ளச் சொன்ன அமைச்சரின் வேண்டுதல் சமயத்தை வைத்துத் தாக்கி விமர்சித்தார் இம்ரான் கான்.
ஷரீப் ஆட்சியில் எரிபொருட்களின் விலை வேகமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் வாயுவின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. அத்துடன் அரசு வரிகளையும் கணிசமாக உயர்த்தி மக்களுக்கான தனது சேவைகளுக்கான செலவுகளைக் குறைத்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்காகக் கொடுக்கப்பட்ட மான்யங்களையும் குறைத்திருக்கிறது. மத்திய வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
நாட்டை மீண்டும் அபிவிருத்திக்குக் கொண்டுவருவதற்காகச் சர்வதேசக் கடன் அமைப்புக்களிடம் கடன் வாங்குவதற்காகவே ஷரீப் அரசு மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதாயிற்று. அதேசமயம் என்றுமில்லாத கடுமையான, நீண்ட கோடைகாலத்தைச் சந்தித்துவரும் நாட்டின் பல பாகங்களுக்கு மின்சாரத்தையும் கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறது. மின்சாரத்துக்கான விலையும் கணிசமாக உயர்த்தப்பட்ட நிலையில் அது நாளின் பல மணி நேரங்கள் இல்லாமல் போவதால் ஷரீப் அரசு மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருகிறது.
உலகிலேயே அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படும் பாகிஸ்தான் பகுதிகள். – வெற்றிநடை (vetrinadai.com)
ஷரீப் அரசின் அங்கத்துவரொருவர் தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளக் கேட்டிருப்பதை எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கும்போது இம்ரான் ஆட்சியின்போது அவரது பாராளுமன்ற உறுப்பினரான ரியாஸ் பத்யானா நாட்டின் பொருளாதார நிலைமையைச் சுட்டிக்காட்டி மக்கள் சர்க்கரைப் பாவனையைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஒரு நேரத்துக்கு ஒரு ரொட்டியை மட்டுமே உணவாகப் பாவிக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்