பெண்ணின் சுதந்திர சுவாசம்|கவிநடை
பெண்ணே உன்னை
மலர் என்றால்
நீ
மயங்கி விடாதே…
நான் முட்கள் தான்
என்று
உன்னை
முன்நிறுத்திச் செல்…
விழித்துக் கொண்ட
விழிகள் என்றும்
விளக்கின் விடியலைத் தேடுவதில்லை…
இருளில் கூட
இமயத்தை எட்டிவிடும்…
ஏளனச் சொற்களில் உன்னை எரித்து விடாதே
ஏணிகள் சில இங்குண்டு உன்னை ஏற்றிவிட…
கைகள் கொடுக்க
யாரும் இல்லை
என்று
கலங்கி விடாதே…
சற்று கண் மூடி பார் உன் லட்சியக்கனவுகள்
உன்னை மீட்டெடுக்கும்…
எதிர் நீச்சல்
போட்டால் தான்
எழுந்து நிற்க முடியும்…
மெல்லினம் மட்டுமே
நீயல்ல!
வல்லினம் ஆக வந்திடு
சில
சந்திப் பிழைகளை
நீக்கிட வேண்டும்…
உன்னை எதிர்க்கும்
இயலாமையிடம்
முயலாமை
ஆகிவிடாதே…
உன் எழுச்சியை
என்றும்
வீழ்ச்சிக்கு
விலை ஆகிவிடாதே…
நாம் பெற்ற
சுதந்திரம்
நான்கு சுவர்களுக்குள்
நம்மை
சிறைப்படுத்த அல்ல…
நம் சிந்தையை
வளப்படுத்தவே…
பதின்பருவ மாயையில்
பதுங்கிக் கொள்ளாதே…
பத்தடி
கடந்தாய் என்றால்
பலப்படுத்த படுவாய்…
எவரின் சிந்திக்கும்
உன்னை
சிறை படுத்தாதே…
சுதந்திரக் காற்றை
சுவாசிக்க
கற்றுக்கொள்…
எழுதுவது: கவிஞர் பெ.மாலையம்மாள்
ஸ்ரீ வில்லிபுத்தூர்.