TSSA UK க்கு வயது 30

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் இன்று 30வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் மிகப்பிரபலயம் வாய்ந்த அமைப்பாக விளங்கி தமிழர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் TSSA UK    இன்று 22ம் திகதி ஜூன்மாதம் தனது முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

1992 ம் ஆண்டு யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச்சங்கமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னரான காலங்களில் இலங்கை  தமிழ் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களையும் இணைக்கும் சிந்தனையில், தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கமாக 90களின் நிறைவில் உருவெடுத்தது.

ஆரம்பித்த காலம் முதல் துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டியையும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியையும் மிகச்சிறப்பாக லண்டனில் கோலாகல நிகழ்வாக ஏற்பாடு செய்துவந்த TSSA UK தொடர்ந்து வந்த நாள்களில் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் அவ்வப்போது ஏற்பாடு செய்து வந்திருந்தது. இன்றைய நாள்களில் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பலர் தவறாது பங்குபற்றும் நிகழ்வுகளாக TSSA  இன் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றமை யாராலும் மறுக்க முடியாது.  இளந்தலைமுறையினர் பலர் போட்டிபோட்டு வெற்றிவாகை சூடும் சுற்றுப்போட்டிகளாக TSSA இன் போட்டிகள் அமைந்திருக்கின்றமை அதற்கு எடுத்துக்காட்டு.

அவ்வப்போது தாயகத்தில் இருந்து வேண்டி வரும்  சேவைகளை  தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கமும் செய்துவருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச்சங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை வடமாகாண ரீதியாக வருடாந்தம் நடத்துவதும் அதனோடு விளையாட்டு வீரர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் செயற்பாடுகளையும்  ஆற்றிவருகிறது.

30ஆண்டுகள் கடந்து பணியாற்ற தொடர்ந்தும் உறுதிபூணும் Tssa அமைப்பு பல புலம்பெயர்ந்த விளையாட்டுத்துறை ஆர்வலர்களை தன்னோடு இணைத்துப்பயணிக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
அதுவும் பலர் தொண்டர்களாக இணைந்து கைகொடுப்பதும் இந்த TSSA uk அமைப்பின் வெற்றிப்பயணத்தில் மிகமுக்கியமான விடயமாகும்.

ஒட்டுமொத்தத்தில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் முக்கிய அமைப்பாக , தவிர்க்க முடியாத அமைப்பாக மிளிரும் TSSA uk அமைப்பு தொடர்ந்தும் பல சேவைகளோடு வெற்றிநடை அமைப்பாக தொடரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

எழுதுவது : யோதிகுமார் , லண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *