உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரிமியா பிராந்திய இராணுவ மையம் தாக்கப்பட்டது.
கிரிமியா பிராந்தியத்திலிருக்கும் ரஷ்யாவின் இராணுவ மையமொன்று செவ்வாயன்று மாலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டிருக்கிறது. வான்வெளி மூலமாகத் அந்த மையம் தாக்கப்பட்டதாகவும் அங்கேயிருந்த ஆயுதங்கள் பல வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. அந்த மையத்தைச் சுற்றிவர சுமார் ஐந்து கி.மீ பிராந்தியம் உடனடியாக மூடப்பட்டதாகவும் ரஷ்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரேனின் ஒரு பாகமாக இருந்து வந்த கிரிமியா தீபகற்பம் சரித்திர ரீதியாகப் பல போர்கள் நடந்த பிராந்தியமாகும். உக்ரேனியப் பிராந்தியமாக இருந்த கிரிமியாவை 2014 இல் ரஷ்யா தாக்கித் தன்வசமாக்கியது. அதன் மேற்குப்பகுதியிலிருக்கும் சக்கி விமானப்படைத் தளத்திலேயே குறிப்பிட்ட தாக்குதல் செவ்வாயன்று நடந்தது. அந்த இராணுவத் தளத்திலிருந்தே பெப்ரவரியில் ரஷ்யா தனது தாக்குதலை உக்ரேன் மீது ஆரம்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ மையத் தாக்குதலைத் தாம் நடத்தவில்லை என்று உக்ரேன் அரசு குறிப்பிட்டிருக்கிறது. கிரிமியா பிராந்தியத்திலிருக்கும் ரஷ்ய எதிர்ப்பாளர்கள் அத்தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். தமது பிராந்தியம் அன்னியரால் ஆக்கிரமிக்கப்பட்டால் அங்கிருப்பவர்கள் அதை எதிர்ப்பது நியாயமானதே என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரிமியா பிராந்தியம் உக்ரேனின் கருங்கடலை அடுத்துள்ள நகரங்களைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாகும். அதேபோலவே அவை குறிப்பிட்ட உக்ரேன் நகரங்களைத் தாக்குவதற்கும் பயன்படுகின்றன. கிரிமியா மீது உக்ரேன் தாக்குதல்களை நடத்துமானால் பதிலாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரஷ்யா பல தடவைகள் எச்சரித்து வந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்