எஸ்தோனிய நகரில் கடைசியாக இருந்த சோவியத்கால நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டன.
வடமேற்கு எஸ்தோனியாவிலிருக்கும் நார்வா நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் ரஷ்யர்களாகும். தற்போதைய ரஷ்ய – எஸ்தோனிய எல்லையிலிருக்கும் அந்த நகரமும் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் அங்கே நிறுவப்பட்ட இரண்டாம் உலகப் போரில் நாஸிகளைச் சோவியத் வென்றதை ஞாபகப்படுத்தும் சிற்பமானது இவ்வாரம் திங்களன்று வரை கம்பீரமாக நின்றிருந்தது. செவ்வாயன்று எஸ்தோனிய அரசின் அதிரடி முடிவாக அந்த ஞாபகச் சின்னம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பால்டிக் நாடுகளில், உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் போரால் முன்னரை விட ரஷ்யாவின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. உக்ரேனை ரஷ்யா கைப்பற்றினால் அடுத்ததாகத் தம் மீதும் ரஷ்யா தாக்கக்கூடும் என்று கணித்து ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக அந்த நாடுகள் எடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யர்களுக்குச் சுற்றுலா விசா கொடுக்கலாகாது என்று முன்னணியில் நின்று குரல் கொடுக்கும் நாடுகளில் எஸ்தோனியாவும் ஒன்றாகும்.
நார்வா நகரசபை உறுப்பினர்கள் குறிப்பிட்ட நினைவுச்சின்னத்தை அகற்றிவிடுவது பற்றி முடிவு எடுக்கத் தயங்கியது. அதனால், வேகமாக எஸ்தோனிய அரசு முடிவெடுத்துச் செவ்வாயன்று அந்தப் போர் ஞாபகச்சின்னத்தை அகற்றிவிட்டது. அது நார்வா நகரில் வன்முறை கலந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தலாமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நார்வா மக்கள் அமைதியாகத் தமது எதிர்ப்பைக் காட்டினார்கள். போர் ஞாபகச்சின்னம் இருந்த இடத்தில் பலர் மலர்கொத்துக்களைக் கொண்டுசென்று வைத்துவிட்டுச் சென்றனர்.
2007 இல் நாட்டின் தலைநகரான தால்லின்னிலிருந்த சோவியத் யூனியன் காலச் சின்னத்தை அகற்றியபோது நாடே கொந்தளித்தது. ரஷ்ய ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டுப் பல எதிர்ப்பு ஊரவலங்களும், வன்முறையான நடவடிக்கைகளும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தன. நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார்.
சோவியத் காலச் சின்னங்கள் எஸ்தோனியாவின் தேசியம் என்ற கண்களில் முள்ளாக உறுத்திவந்தன. வயதானவர்களிடையேயும், ரஷ்யச் சிறுபான்மையினரிடையேயும் ஆராதிக்கப்பட்ட சோவியத் வீரர்களின் வெற்றி தற்கால எஸ்தோனியர்களிடையே வேறு விதமாகவே பார்க்கப்பட்டு வந்தது. சோவியத் யூனியனின் படைகள் நாஸிப்படைகளை வீழ்த்திய அதே சமயம் எஸ்த்தோனியா சோவியத்திடம் தனது சுதந்திரத்தையும் இழந்தது.
1940 ஜூனில் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட எஸ்தோனியாவை 1941 – 1944 காலத்தில் நாஸிப்படைகள் கைப்பற்றி ஜேர்மனியின் ஒரு பகுதியாக்கின. 1944 இல் நாஸிகளிடமிருந்து மீண்டும் எஸ்தோனியாவைக் கைப்பற்றிய சோவியத் யூனியன் 1991 வரை அதைத் தனது கொடும்பிடிக்குள் வைத்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்