முழுமையான ராஜதந்திர உறவுகளை உண்டாக்கிக்கொள்ள துருக்கியும், இஸ்ராயேலும் முடிவு.
மார்ச் மாதத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்தார். அதையடுத்து இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் மற்றவரின் நாட்டுக்கு விஜயம் செய்து படிப்படியாக இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளை மீண்டும் பின்னியெடுத்தார்கள். அதன் தொடராக இரு நாடுகளிடயேயும் அறுக்கப்பட்டிருந்த உறவுகளை மீண்டும் முழுமையாகச் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
துருக்கியில் அங்காரா நகரில் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இந்தச் செய்தியைப் பகிரங்கப்படுத்தினார். அதன் அர்த்தம் தாம் பாலஸ்தீனர்களின் சுய உரிமைப் போராட்டத்துக்கான ஆதரவைக் கைவிடுவதல்ல என்பதையும் அமைச்சர் மெவ்லுத் கவுசோகுலு சுட்டிக்காட்டினார். புதன் கிழமையன்று துருக்கிய ஜனாதிபதியும், இஸ்ராயேல் பிரதமரும் உரையாடிய பின்னர் இரண்டு நாடுகளும் மற்ற நாட்டுக்கான தூதுவரை மீண்டும் நியமிப்பது பற்றியும் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்குக் கொண்டுவருவதை 2018 இல் எதிர்த்துப் பாலஸ்தீனர்கள் போராடியபோது 60 பேர் இஸ்ராயேல் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அதையெதிர்த்து இஸ்ராயேலுடனான தனது உறவுகளைத் துண்டித்துக்கொண்டது துருக்கி.
சாள்ஸ் ஜெ. போமன்