“முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் உடனடியாகச் சிறைத்தண்டனை ஆரம்பிக்கவேண்டும்,” என்றது நீதிமன்றம்.
தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் எடுத்த கடைசிப் பிரயத்தனமும் வெற்றியளிக்கவில்லை. அவரது சிறைத்தண்டனை பற்றிய மேன்முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் சார்பில், “மேல்முறையீட்டில் எந்தவிதப் புதிய விபரங்களும் இல்லை. எனவே, விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை சரியானதே,” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அபிவிருத்தி நிதி [1Malaysia Development Berhad]என்ற பெயரில் வங்கி ஆரம்பித்து அதிலிருந்து பெருந்தொகையைக் கையாடியதாக ரஸாக் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 10.1 மில்லியன் டொலர் வரை அவர் கையாடியதாக 2020 இல் மலேசிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது. அதற்கான 12 வருட சிறைத்தண்டனையிலிருந்து தப்பவே ரஸாக் பல இடங்களிலும் மேன்முறையீடு செய்திருந்தார். கடைசியாக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
ரஸாக்கின் தந்தையும், மாமனாரும் கூட மலேசியாவின் பிரதமராக இருந்தவர்கள். ரஸாக் 2009 – 2018 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் மக்களிடையே பிரபலமாக இருந்த ரஸாக் படிப்படியாக ஆதரவை இழந்து 2018 இல் தேர்தலில் பலமான எதிர்ப்பைப் பெற்றார். தனது காலத்தில் அவர் பல ஊழல்களைச் செய்ததாக மக்களிடையே ஆதரவிழந்தார்.
மலேசிய அரசு மட்டுமன்றி சுவிஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார ஊழல் அமைப்புக்களும் ரஸாக்கின் சர்வதேச வங்கிக்கணக்குகள், பொருளாதார நடவடிக்கைகளை ஆராய்ந்தன. அமெரிக்காவின் விசாரணையில் அவர் 1 பில்லியன் டொலர் பெறுமதியான தொகைகளைக் கையாடியதாகத் தெரியவந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்