மின்சாரத்தை மிச்சப்படுத்த பங்களாதேஷில் ஊழிய நேரம், பாடசாலை நேரம் குறைக்கப்படுகிறது.
சமீப காலத்தில் உலக நாடுகள் பல அனுபவித்துவரும் எரிசக்திக்கான தட்டுப்பாட்டை பங்களாதேஷும் எதிர்கொள்கிறது. பெரும்பாலான வளரும் நாடுகள் தமது நாடுகளில் மின்சாரப் பாவனையைக் குறைப்பதன் மூலமே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பங்களாதேஷும் தமது மாணவர்களுக்கான பாடசாலை நேரத்தைக் குறைத்து, தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தையும் குறைத்திருப்பதாக அறிவித்தது.
உக்ரேன் – ரஷ்யப் போரால் ஏற்பட்டிருக்கும் சர்வதேச எரிபொருள் விலையேற்றத்தின் விளைவாக பங்களாதேஷிலும் அவ்விலை வேகமாக எகிறியிருக்கிறது. சமீபத்தில் சுமார் 50 % ஆல் நாட்டின் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எரிபொருள் தேவைக்காக நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பிலிருந்து பணம் எடுக்கவேண்டும். ஆனால், பங்களாதேஷ் வெளிநாட்டு நாணயக் கையிருப்பும் குறைவான நிலையிலேயே இருக்கிறது. டீசலால் இயக்கப்படும் எரிபொருள் மையங்களின் மின்சாரத் தயாரிப்பை பங்களாதேஷ் கணிசமாகக் குறைத்திருக்கிறது. அதன் விளைவாலும் நாடு மின்சாரத்தட்டுப்பாட்டால் தவிக்கிறது.
அரசாங்க ஊழியர்களுக்கான சேவை நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டு ஏழு மணித்தியாலமாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெள்ளிக்கிழமைகளில் விடுமுறையாக இருக்கும் பாடசாலைகள் மாணவர்களுக்குச் சனிக்கிழமையும் விடுதலை கொடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் தமது வசதிக்கேற்றபடி வேலை நேரத்தை மட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
சிறீலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போலவே பங்களாதேஷும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்க விண்ணப்பம் செய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்